காலக்கெடு மீறி இறக்குமதி செய்யப்பட்ட உப்பு கொள்கலன்கள் துறைமுகத்தில் தேக்கம்

0
23
Article Top Ad

உப்பு இறக்குமதிக்காக வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த பின்னரும் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 1,000க்கும் மேற்பட்ட உப்பு கொள்கலன்கள், கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக துறைமுகக் களஞ்சியசாலைகளில் தேங்கி கிடப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனுடன், தரமற்றவை என அடையாளம் காணப்பட்டதும், இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் (SLSI) அனுமதி தாமதமானதும் ஆகிய மேலும் சுமார் 700 உப்பு கொள்கலன்கள் சுங்கத் திணைக்களத்தின் சில இடங்களில் தேங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நாட்டில் ஏற்பட்ட உப்புத் தட்டுப்பாட்டைத் தீர்க்கும் நோக்கில், தனியார் இறக்குமதியாளர்களுக்கு உப்பு இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில், கடந்த ஜூன் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் உப்பு இறக்குமதி செய்யப்பட வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், குறித்த காலக்கெடு முடிவடைந்த பின்னர் சில இறக்குமதியாளர்களால் உப்பு நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாகவும், அவ்வாறு கொண்டு வரப்பட்ட கொள்கலன்களே தற்போது துறைமுகங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் சுங்க ஊடகப் பேச்சாளரும் சுங்கப் பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவாவிடம் அத தெரண வினவியபோது, உப்பு இறக்குமதி குறித்த அரசாங்க வர்த்தமானி அறிவித்தலின் படியே சுங்கத் திணைக்களம் செயற்படுவதாக அவர் தெரிவித்தார். தேங்கியுள்ள கொள்கலன்களை மீண்டும் வெளிநாடுகளுக்கு மீள் ஏற்றுமதி செய்யுமாறு இறக்குமதியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, உப்பு இறக்குமதி செய்த நிறுவனமொன்று இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக துறைமுக அதிகாரசபையின் தலைவர் சிறிமெவன் ரணசிங்கவிடம் அத தெரண வினவியபோது, இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் தற்போது ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், துறைமுகங்களில் இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் மீள் ஏற்றுமதி கொள்கலன்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சேவைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் வகையில் உடனடி நடவடிக்கைகள் எடுக்குமாறு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, குறைந்த அபாயம் கொண்ட கொள்கலன்களை புளுமெண்டல் முனையத்திற்கு அனுப்பி, சுங்கத் திணைக்களத்தின் முழுமையான மேற்பார்வையின் கீழ் விடுவிப்புப் பணிகளை விரைவுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.