பாராளுமன்றத்தை கலைத்தார் ஜப்பான் பிரதமர் – தேர்தலுக்கு அழைப்பு

0
70
Article Top Ad

ஜப்பானின் பிரதமர் சனே தகாயிச்சி, பாதுகாப்பு செலவுகளை அதிகரிப்பதும் புதிய பாதுகாப்பு மூலோபாயத்தை முன்னெடுப்பதும் தொடர்பாக மக்களின் ஆதரவைப் பெறும் நோக்கில், நாடாளுமன்றத்தை கலைத்து தேசியத் தேர்தலை அறிவிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

இந்த திடீர் தேர்தலில் நாடாளுமன்றத்தின் கீழ்சபையிலுள்ள 465 இடங்களும் தீர்மானிக்கப்படவுள்ளன. கடந்த ஒக்டோபரில் ஜப்பானின் முதல் பெண் பிரதமராக பொறுப்பேற்றதற்குப் பின்னர், தகாயிச்சி எதிர்கொள்ளும் முதல் தேர்தல் இதுவாகும்.

முன்கூட்டியே தேர்தலை நடத்துவதன் மூலம், மக்களிடையே காணப்படும் வலுவான ஆதரவைப் பயன்படுத்தி, ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியில் தனது பிடியை வலுப்படுத்துவதோடு, கூட்டணி அரசாங்கத்தின் பலவீனமான பெரும்பான்மையையும் உறுதிப்படுத்த தகாயிச்சி முயற்சிக்கிறார்.

இந்நிலையில், வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ள சூழலில் உயர்ந்த செலவுத்திட்டங்களுக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்களா என்பதே இந்தத் தேர்தலின் முக்கிய சோதனையாக அமையும். கடந்த வாரம் அரச ஒளிபரப்பு நிறுவனமான NHK வெளியிட்ட கருத்துக்கணிப்பின் படி, 45 சதவீதமானவர்கள் விலை உயர்வே தங்களின் முதன்மை கவலையாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, தூதரக உறவுகள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் 16 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தில் உள்ளன.

இந்தத் தேர்தலின் முடிவு, பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியில் அதிக செலவுகள் மற்றும் வலுப்படுத்தப்பட்ட பாதுகாப்புக் கொள்கைகளை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதைக் காட்டும் முக்கிய குறியீடாக அமையும்.