சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்தக் கூட்டத்தில், சர்வதேச ஒழுங்குமுறைகள் குறித்துக் கருத்து வெளியிட்ட கனடா பிரதமர் மார்க் கார்னியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற உரையின் போது, கிரீன்லாந்தை கையகப்படுத்தும் நோக்கம் மற்றும் வெனிசுவேலா விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்துப் பேசிய ட்ரம்ப், கனடா பிரதமர் மார்க் கார்னியை இலக்கு வைத்து காட்டமான கருத்துக்களை முன்வைத்தார். அமெரிக்காவினால் தான் கனடா உயிர்வாழ்கிறது என்பதை கனடா நினைவில் கொள்ள வேண்டும் என்றும், அடுத்த முறை கருத்துக்களை வெளியிடும்போது இதனை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுமாறும் அவர் எச்சரிக்கும் வகையில் பேசினார்.
இதற்கு முன்னதாக உரையாற்றிய கனடா பிரதமர் மார்க் கார்னி, தற்போதைய சர்வதேச விதிகள் சார்ந்த கட்டமைப்பு ஒரு முறிவைச் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். பெரிய நாடுகள் பொருளாதார ஒருங்கிணைப்பை ஒரு ஆயுதமாகவும், வரிகளை அழுத்தக் கருவியாகவும் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டிய அவர், பழைய உலக ஒழுங்குமுறை இனித் திரும்பாது எனவும், ஒரே சிந்தனையுடைய நாடுகளுடன் கனடா புதிய கூட்டணிகளை உருவாக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
ட்ரம்ப் முன்னதாக கனடாவைத் தன்னுடன் இணைத்துக் கொள்வது குறித்துப் பேசியிருந்ததோடு, கனடா மற்றும் கிரீன்லாந்தை அமெரிக்க வரைபடத்துடன் இணைத்து ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்திருந்தார். ட்ரம்ப்பின் தற்போதைய விமர்சனங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்க மார்க் கார்னியின் அலுவலகம் மறுத்துவிட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

