அமெரிக்காவில் டிக்‌டொக் தடையை தவிர்க்க புதிய அமெரிக்க உரிமை ஒப்பந்தம்

0
82
Article Top Ad

டிக்‌டொக் நிறுவனத்தின் சீன உரிமையாளர் பைடான்ஸ், அமெரிக்காவில் 200 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்ட குறும்பட செயலியைத் தடை செய்யும் நடவடிக்கையைத் தவிர்க்க, பெரும்பங்கு அமெரிக்க உரிமையுடன் கூடிய கூட்டு நிறுவனத்தை அமைப்பதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை றிவித்தது.

இந்த ஒப்பந்தம், 2020 ஆகஸ்டில் தேசிய பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து டிக்‌டாக் செயலியைத் தடை செய்ய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முயன்றதிலிருந்து தொடர்ந்த சட்ட மற்றும் அரசியல் போராட்டங்களுக்கு பிந்தைய முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

TikTok USDS Joint Venture LLC எனப்படும் புதிய கூட்டு நிறுவனம், அமெரிக்க பயனர்களின் தரவு, செயலிகள் மற்றும் அல்கோரிதங்களை தரவு தனியுரிமை மற்றும் சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் பாதுகாக்கும் என பைடான்ஸ் தெரிவித்துள்ளது. ஒப்பந்தத்தின் படி, அமெரிக்க மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்கள் இணைந்து 80.1 சதவீத பங்குகளை வைத்திருப்பார்கள்; பைடான்ஸ் 19.9 சதவீத பங்குகளைத் தக்க வைத்துக் கொள்வதாக கூறப்பட்டுள்ளது.

இந்த கூட்டு நிறுவனத்தின் மூன்று முக்கிய மேலாண்மை முதலீட்டாளர்களாக கிளவுட் கணினி சேவை நிறுவனமான ஓரக்கிள், தனியார் ஈக்விட்டி நிறுவனம் சில்வர் லேக் மற்றும் அபுதாபியைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனம் MGX ஆகியவை தலா 15 சதவீத பங்குகளைப் பெறுகின்றன.

இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க மற்றும் சீன அரசுகள் இரண்டும் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன தூதரகம் இதுகுறித்து உடனடி கருத்து தெரிவிக்கவில்லை.

2024 சட்டத்தின் கீழ் சீன உரிமையாளர் நிறுவனத்திலிருந்து அமெரிக்க சொத்துகளை விலக்க வேண்டிய நிபந்தனைகளுக்கு இந்த ஒப்பந்தம் ஏற்பதாக ட்ரம்ப் கடந்த ஆண்டு கூறியிருந்தார். புதிய கூட்டு நிறுவனம் டிக்‌டொக்கின் அமெரிக்க செயலியை இயக்கும் என வெள்ளை மாளிகை முன்பே தெரிவித்திருந்தது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், டிக்‌டொக்கின் அமெரிக்க தரவு மற்றும் தொழில்நுட்ப செயற்பாடுகள் புதிய கூட்டு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், விளம்பரம் மற்றும் இ-வர்த்தகம் போன்ற வருவாய் ஈட்டும் செயற்பாடுகள் பைடான்ஸ் முழுமையாக உரிமையுள்ள தனி பிரிவின் கீழ் தொடரும் என முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.