இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து ஆசிய நாடுகள் பலவும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக தாய்லாந்து மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் தங்களது விமான நிலையங்கள் மற்றும் எல்லைப் பகுதிகளில் மேற்கு வங்கத்திலிருந்து வரும் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகளை கட்டாயமாக்கியுள்ளன. தாய்வான் இந்த வைரஸை மிகவும் ஆபத்தான நோய்கள் பட்டியலில் சேர்க்க பரிந்துரை செய்துள்ளது.
மேற்கு வங்கத்தின் பாரசாட் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த ஐந்து மருத்துவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் 110 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். நிபா வைரஸ் என்பது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடியது. இதற்கு முறையான தடுப்பூசிகள் இல்லாத காரணத்தால், இதன் இறப்பு விகிதம் 40 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை மிக அதிகமாக உள்ளது.
காய்ச்சல், தலைவலி, தசை வலி மற்றும் வாந்தி போன்றவை இதன் ஆரம்பக்கால அறிகுறிகளாகும். பாதிப்பு தீவிரமடையும் போது மூளை அழற்சி ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படக்கூடும். உலக சுகாதார அமைப்பு இந்த வைரஸை கொவிட்-19 போன்றே அதிக ஆபத்துள்ள நோய்களின் பட்டியலில் வைத்துள்ளது. மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள இந்த வைரஸ் பரவலின் ஒட்டுமொத்த நிலை குறித்து சுகாதாரத் துறையினர் தொடர்ந்து தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

