ட்ரம்பின் வரி : உலக வர்த்தகத்தில் ஒரு அதிரடி ஆட்டம்!

0
143
Article Top Ad

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொண்டு வந்த அவசரகால இறக்குமதி வரி சட்டத்தை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது. இது ட்ரம்பின் கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், பின்னடைவு என்றும் ஒருபுறம் எதிர்வுகூறல்கள் வந்துகொண்டிருக்க, அவரோ தனக்கே உரிய பாணியில் அந்த அதிகார ஆட்டத்தை ஆட ஆரம்பித்துள்ளார்.

“கைப்பாவைகள், மடிநாய்கள், முட்டாள்கள்…” என்று நீதிபதிகளைப் பார்த்து கர்ஜித்த டிரம்ப், அடுத்த சில மணித்தியாலங்களிலேயே உலக நாடுகளுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். உலகத்துக்கே 15% இறக்குமதி வரியை  விதிப்பதாக அறிவித்து, ஒரு புதிய வர்த்தகப் போரையே ஆரம்பித்து வைத்துள்ளார். இது வெறும் கொள்கை முடிவு மட்டுமல்ல, இது ஒரு தனிப்பட்ட யுத்தம் என்றே நாம் பார்க்கவேண்டும்.

நடப்பது என்ன?

2025 ஜனவரியில் பதவியேற்றது முதல், ட்ரம்ப் வரியை ஒரு ஆயுதமாகவே பயன்படுத்துகின்றார். சீனாவிலிருந்து வரும் உபகரணங்கள் முதல் மலேசிய தயாரிப்புகள் வரை எல்லாவற்றிற்கும் வரி விதித்து, இதுவரை 133 பில்லியன் டொலர்களைச் சுருட்டியிருக்கிறார். அமெரிக்கத் தொழிற்சாலைகளை உள்ளூருக்கு கொண்டு வருவதும், வரியைக் குறைத்து அமெரிக்கர்களின் பைகளை நிரப்புவதுமே அவரது திட்டம்.

ஆனால், பெப்ரவரி 20-ஆம் திகதி உச்ச நீதிமன்றம் கொடுத்த 6-3என்ற  தீர்ப்பு ஒரு திருப்புமுனையாக ஆகிவிட்டது. “1977-ஆம் ஆண்டு அவசரகால அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்றீர்கள்”  என  நீதிபதிகள் கூறியுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட பல நிறுவனங்களுக்கு பில்லியன் கணக்கான டொலர்களை அமெரிக்க அரசாங்கம் திருப்பிக் கொடுக்குமா?

ட்ரம்ப் என்ன செய்வார்?

நீதிமன்ற தீர்ப்பினை பார்த்து மாற்றங்களை ஏற்படுத்துவார் என நாம் பார்த்துக்கொண்டிருக்க, அவரோ பழைய 1974-ஆம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தை தூசி தட்டி எடுத்து, உடனடியாக 10% வரியை விதித்தார்.  ஒரே நாளுக்குள், அதாவது நேற்று (21.02.2025) அது 15% ஆக உயர்ந்துவிட்டது. இது கனடா போன்ற நாடுகளுக்குச் சலுகை கொடுத்தாலும், வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகளைக் கடுமையாகப் பாதிக்கும். இந்த வரிப் பணத்தை வைத்தே அமெரிக்கர்களுக்குப் பாரிய வரிச் சலுகைகளை வழங்க அவர் திட்டமிடுகின்றார்.

இலங்கைக்கு என்ன பாதிப்பு?

ஏற்கனவே பொருளாதார ரீதியில் பாதிப்புகளை சந்தித்துள்ள இலங்கை போன்ற நாடுகளுக்கு நிச்சயமாக இது பாதிப்பினை ஏற்படுத்தும். பிரேசில் ஜனாதிபதி லூலா இதை ‘மிரட்டல்’ என்கிறார். சீனா இதை ‘கட்டாயப்படுத்துதல்’ என்கிறது.

முக்கியமாக, இலங்கை நிலையை யோசித்துப் பாருங்கள். எமது  நாட்டு ஆடைகள் 40 வீதம் அமெரிக்காவுக்குத் தான் ஏற்றுமதியாகின்றது. வருடாந்தம் 3 பில்லியன் டொலர் உபரி வருமானம் அமெரிக்காவிடமிருந்து கிடைக்கின்றது. தற்போது இந்த வரி அதிகரிப்பால்,  ஆடைத் தொழிற்சாலைகள் நிச்சயம் பின்னடைவை சந்திக்கும். இது முக்கியமான ஒரு செய்தியையும் கூறுகின்றது. அதாவது, இனிமேல் நாங்கள் அமெரிக்காவை மட்டும் நம்பியிருக்க முடியாது, ஐரோப்பிய சந்தைப் பக்கம் நகர வேண்டும் என்பதுதான் அந்த செய்தி. ஏற்றுமதியாளர்கள் ஏற்கனவே இதுபற்றி கவனஞ்செலுத்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இது வெற்றியா? தோல்வியா?

ட்ரம்ப் சொல்வது போல அமெரிக்காவுக்கு வேலைவாய்ப்புகள் வருமா, அல்லது பொருட்களின் விலை உயர்ந்து பணவீக்கம் அதிகரிக்குமா என்பது தான் இப்போதைய கேள்வி. 1930-களில் நடந்த பொருளாதார வீழ்ச்சியை இது நினைவுபடுத்துவதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

ஆனாலும் ட்ரம்ப் எதையும் காதில் வாங்குவதாக இல்லை. அமெரிக்கா இனி யாருக்கும் ஓசியில் இடமளிக்காது என்பதில் அவர் குறியாக இருக்கிறார்.

உலக வர்த்தகம் என்கின்ற இந்த சூதாட்டத்தில், ட்ரம்ப் பகடையை உருட்டி விட்டுள்ளார். அது யாருக்குச் சாதகமாக விழப்போகின்றது  என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏற்கனவே அமெரிக்க நீதித்துறையும் உலக நாடுகளும் கொதித்துப் போயுள்ளன. இவற்றிற்கு ட்ரம்ப் என்ன செய்ய போகின்றார்?

“அமெரிக்காவின் இந்த அதிரடி வரி விதிப்புக்கு பதிலடி கொடுக்க ஐரோப்பிய ஒன்றியத்திடம் போதிய விடயங்கள் உள்ளன” என பிரான்ஸ் நாட்டின் வர்த்தக அமைச்சர் நிக்கோலஸ் பொரிசியர், ஃபினான்சியல் டைம்ஸ்  இதழுக்கு தெரிவித்துள்ளார். அப்படி என்ன செய்யப் போகின்றனர் என பொறுத்திருந்து பார்ப்போம்.

செய்தியாக்கம் – கே.கே.