ஈரான் போர் – இந்தியாவுடனான உறவு: அவுஸ்திரேலியாவில் கனேடிய பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட முக்கிய கருத்துக்கள்

0
30
Article Top Ad

அவுஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள கனேடிய பிரதமர் மார்க் கார்னி, ஈரான் மீதான தாக்குதல்கள் மற்றும் இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகள் குறித்து சிட்னியில் வைத்து ஊடகவியலாளர்களிடம் சில முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

ஈரான் மீதான தாக்குதல்களும் கனேடிய நிலைப்பாடும்

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களை கனடா ஆதரிப்பதாகத் தெரிவித்த பிரதமர் மார்க் கார்னி, எனினும் இந்த நிலைப்பாட்டைத் தான் “வருத்தத்துடனேயே” எடுப்பதாகக் குறிப்பிட்டார். “சர்வதேச ஒழுங்குமுறை தோல்வியடைந்ததையே தற்போதைய மோதல் காட்டுகிறது” என அவர் சுட்டிக்காட்டினார்.

ஈரான் ஒருபோதும் அணுவாயுதத்தை வைத்திருக்கக்கூடாது என்பதில் கனடா உறுதியாக இருப்பதாகவும், பாலைவனத்திற்கு அடியில் ஒரு மைல் ஆழத்தில் எவரும் சிவில் அணுசக்தித் திட்டங்களை முன்னெடுப்பதில்லை என்றும் அவர் காரசாரமாகக் குறிப்பிட்டார். ஈரானின் தற்போதைய ஆட்சியானது பயங்கரவாதத்தின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர் எனவும், பல கனேடியர்களின் உயிரிழப்பிற்கு அவர்கள் பொறுப்பு எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

அதேவேளை, கனடா போன்ற நட்பு நாடுகளுடன் ஆலோசிக்காமல் அமெரிக்காவும் இஸ்ரேலும் தன்னிச்சையாகச் செயற்பட்டதையும் அவர் விமர்சித்தார்.

இந்தியாவுடன் புதுப்பிக்கப்படும் உறவு

முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் காலத்தில், சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலையில் இந்தியாவின் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டினால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு கடுமையாகப் பாதிப்படைந்திருந்தது. தற்போது பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அரசாங்கம் இந்த உறவைச் சீர்செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தான் நடத்திய பேச்சுவார்த்தைகள் மிகவும் “வெளிப்படையானவை” (Frank) என கார்னி வர்ணித்தார்.

கனடா மண்ணில் இந்தியா முன்னெடுப்பதாகக் கூறப்பட்ட வன்முறைச் செயல்கள் தற்போது இல்லை என கனேடிய அதிகாரி ஒருவர் தெரிவித்த கருத்தை பிரதமர் கார்னி முற்றாக ஆமோதிக்கவில்லை. “நான் அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தமாட்டேன்” எனக் குறிப்பிட்ட அவர், எல்லை தாண்டிய குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து உயர்மட்டத்தில் தொடர்ந்து பேச வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக, கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் அணுசக்தி, முக்கியமான கனிமங்கள், விண்வெளி மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் நிஜ்ஜார் படுகொலை தொடர்பான வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இரு நாடுகளும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு ரீதியாக மீண்டும் கைகோர்க்கத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.