மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் யுத்தச் சூழல் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் மற்றும் அதனைச் சமாளிப்பதற்கான அவசர நடவடிக்கைகள் குறித்த உயர்மட்டக் கலந்துரையாடல் இன்று (04) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாட்டின் பொருளாதார நிலைத்தன்மைக்குக் குந்தகம் ஏற்படாமல் இருப்பதற்கான பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
தற்போதைக்கு நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ள போதிலும், எதிர்கால இடர்களைக் கருத்திற்கொண்டு அவற்றை முகாமைத்துவம் செய்வது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
எரிவாயு கையிருப்பை பேணுவதற்குப் போதிய களஞ்சிய வசதிகள் இல்லாத காரணத்தால், குறுகிய கால தீர்வாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தைப் பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
சர்வதேச ரீதியில் கப்பல் போக்குவரத்துப் பாதிப்பினால் உள்நாட்டு எரிபொருள் விலைகளில் தாக்கம் ஏற்படாதவாறு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சூயஸ் கால்வாய் மற்றும் ஹோமுஸ் நீரிணை போன்ற முக்கிய கடல் வழிப்பாதைகள் மூடப்படும் பட்சத்தில், கொழும்புத் துறைமுகத்தில் ஏற்படக்கூடிய நெரிசல்களைத் தவிர்க்க இலங்கை நீண்டகாலமாகப் பணியாற்றும் கப்பல் நிறுவனங்களுக்கு விசேட வசதிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போதைக்குத் தேவையான உணவு இருப்புக்கள் போதியளவு உள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உறுதியளித்துள்ளார்.
ஐரோப்பாவிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள் மத்திய கிழக்கு ஊடாகவே பயணிக்கின்றனர். எனவே, விமானப் போக்குவரத்தில் ஏற்படக்கூடிய தடைகளைச் சமாளிக்க மாற்று வழிகள் குறித்து சுற்றுலா அமைச்சு ஆராய்ந்து வருகின்றது.
தரவு மையங்கள் (Data Centres) போன்ற புதிய தொழில்நுட்ப முதலீடுகளை ஊக்குவிக்க விசேட நிவாரணப் பொதி ஒன்றை (Relief Package) தயாரிக்குமாறு ஜனாதிபதி நிதி அமைச்சுக்குப் பணிப்புரை விடுத்தார். இது தொடர்பில் ஜனாதிபதியின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான சிரேஷ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜயசூரியவின் வழிகாட்டலின் கீழ் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
எதிர்காலத்தைச் சரியாகக் கணிக்க முடியாது என்றாலும், அனைத்துத் துறைகளிலும் அவதானமாக இருந்து சவால்களை ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தினார். குறிப்பாக, சாதாரண பொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் பணவீக்கம் என்பவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முன்னுரிமை அளிக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் மத்திய வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் கலந்துகொண்டனர்.

