ஓராண்டு மீளாய்வு: புதிய அரசாங்கத்தின் திருத்தப்பட்ட செயல்திட்டமும், முன்னேற்றங்களில் நிலவும் வெற்றிடங்களும்!

0
27
Article Top Ad

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்தின் கீழ் இலங்கை வழங்கிய வாக்குறுதிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்த TISL, அதன் மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது. புதிய அரசின் திருத்தப்பட்ட செயல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், ஆரம்பத்தில் சட்ட ரீதியான சில முன்னேற்றங்கள் காணப்பட்டாலும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் தொடர்ச்சியான தாமதங்கள் நிலவிய ஒரு ஆண்டாக அமைந்துள்ளதாக TISL சுட்டிக்காட்டுகிறது. இலங்கையின் நிர்வாகக் கட்டமைப்பில் காணப்பட்ட பலவீனங்களைச் சீரமைக்க உருவாக்கப்பட்ட அரசாங்கச் செயல் திட்டத்தின் முன்னேற்றத்தை கண்காணிக்க GAP Tracker எனும் சுயாதீன வழிமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

நிர்வாகம் மற்றும் ஊழலுக்கு எதிரான சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் அரசாங்கம் கண்டுள்ள முன்னேற்றங்களை மதிப்பீடு செய்யும் வகையில் இந்த அறிக்கை அமைந்துள்ளது.

பொறுப்புக்கூறல் மற்றும் நிதி நிர்வாகத்தை வலுப்படுத்த அடித்தளத்தை அமைக்கும் வகையில் பல முக்கியமான சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஊழல் மற்றும் சட்டவிரோத சொத்துக்குவிப்பு மூலம் ஈட்டப்பட்ட வருமானத்தை மீட்பதற்கான சொத்து மீட்புச் சட்டம் அமுலுக்கு வந்துள்ளதுடன், நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் யார் என்பதைக் கண்டறியும் ஏற்பாடுகளும் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், அரசு கொள்வனவுச் செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் ஆரம்பித்துள்ளதுடன் வரி மற்றும் கொள்வனவு தொடர்பான சில தரவுகளை வெளியிடுவதில் சிறிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

எனினும், சில முன்னேற்றங்கள் உள்ள போதிலும் சீர்திருத்த முயற்சிகள் சீரற்ற நிலையிலும் முழுமையற்றதாகவுமே தொடர்கின்றன. புதிய பொது கொள்முதல் சட்டத்தை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதுடன், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் வாக்குறுதிகளை விடவும் பின்தங்கியே உள்ளன. மிக முக்கியமாக 2026 பெப்ரவரி மாதத்திற்குள் வெளியிடப்பட வேண்டிய புதுப்பிக்கப்பட்ட அரசாங்கச் செயல் திட்டம் (GAP) இன்னும் வெளியிடப்படவில்லை என்பதுடன் அது எந்தக் கட்டத்தில் உள்ளது என்பதும் தெரியவில்லை. சட்டங்களை இயற்றுவதில் காட்டப்படும் வேகம் அந்தச் சட்டங்களை நிறுவன ரீதியாகச் செயல்பாட்டிற்குக் கொண்டு வருவதில் இல்லை என்பதை GAP Tracker சுட்டிக்காட்டுகிறது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது நீண்டகாலமாக தொடரும் நிர்வாக தோல்விகள் மற்றும் வேரூன்றிப்போயுள்ள ஊழல் ஆபத்துகளாலேயே ஏற்பட்டுள்ளது. சட்டங்கள் இயற்றப்படுவதோடு மட்டும் இந்தச் சீர்திருத்தங்கள் நின்றுவிடக் கூடாது என்பதுடன் அவை தேக்கமடையாமல் இருப்பதை உறுதிசெய்ய வெளிப்படையான அறிக்கையிடல் மற்றும் மக்கள் பங்களிப்பு அவசியம் என TISL வலியுறுத்துகின்றது. பொதுமக்களின் நலன்களைப் பாதுகாக்கும் ஒரு வலுவான மற்றும் பொறுப்புக்கூறத்தக்க பொதுத்துறையை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும்.