உலகின் நம்பர் ஒன் பணக்காரர் இடத்தை எலான் மஸ்க் இழந்துள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் உரிமையாளரான அவர் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை ரூ.3½ லட்சம் கோடிக்கு விலைக்கு வாங்கினார்.
இதையடுத்து அவர் டெஸ்லா நிறுவனத்தின் ரூ.32 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றார். இதற்கிடையே டுவிட்டர் நிறுவனத்தில் ரூ.3½லட்சம் கோடி முதலீடு செய்ததாலும் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் சரிந்ததாலும் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு குறைந்தது.
இதையடுத்து எலான் மஸ்க்கை முந்தி பிரான்ஸ் தொழில் அதிபர் பெர்னார்ட் அர்னால்ட் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தை பிடித்தார். போர்ப்ஸ் பட்டியலில் பெர்னார்ட் அர்னால்ட் ரூ.15.29 லட்சம் கோடி சொத்துடன் முதலிடத்தில் உள்ளார்.
எலான் மஸ்க் ரூ.15.28 லட்சம் கோடியுடன் 2-வது இடத்துக்கு இறங்கினார். இந்த ஆண்டு தொடக்கத்தில் உலகின் நம்பர் ஒன் இடத்தை எலான் மஸ்க் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது எலான் மஸ்க்குக்கும் பெர்னார்ட் அர்னால்ட்டுக்கும் இடையேயான சொத்து மதிப்பு வித்தியாசத்தில் மிக குறைந்த அளவிலேயே உள்ளது.
இதனால் எலான் மஸ்க்கின் நிறுவனங்களின் பங்கு சற்று உயர்ந்தாலும் அவர் மீண்டும் முதலிடத்தை பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
டெஸ்லாவின் பங்குதாரர்கள் கூறும் போது, ‘டுவிட்டரில் எலான் மஸ்க் அதிக கவனம் செலுத்தியதே டெஸ்லாவின் பங்கு குறைய காரணமாக இருந்தது’ என்றார்.
டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய எலான் மஸ்க் அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். சுமார் 4 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.