பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (08) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
ஜனாதிபதியும், நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருமான ரணில் விக்ரமசிங்க கடந்த நவம்பர் 14 ஆம் திகதி 2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான ஆரம்ப உரையை முன்வைத்திருந்தார்.
நவம்பர் 15ஆம் திகதி முதல் நவம்பர் 22ஆம் திகதி வரை இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றதுடன், இரண்டாவது மதிப்பீடு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருந்தது.
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழு விவாதம் நவம்பர் 23ஆம் திகதி ஆரம்பமாகி நேற்று (08) வரை நடைபெற்று இறுதியில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதற்கமைய மூன்றாவது மதிப்பீடு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.