“தோல்விப் பயத்தில்தான் ரணில் – ராஜபக்ச அரச தரப்பினர் தேர்தலுக்குச் செல்வதற்குப் பயப்படுகின்றார்கள். அதனால் தேர்தலை ஒத்திவைக்க அவர்கள் திட்டம் தீட்டுகின்றனர். அரசின் இந்தச் சதித்திட்டத்துக்குத் தேர்தல்கள் ஆணையாளர் துணைபோகின்றார்.”
– இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
‘எதிர்வரும் ஜனவரி 9 க்கு முன் உள்ளூராட்சி சபைத் தேர்தலை அறிவிப்பதற்குத் தயார் என்று தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்குமா?’ என்ற கேள்விக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க பதிலளிக்கும் போது,
“தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் கடந்த ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வந்துவிட்டது. அவர்கள் நினைத்தால் இன்றே வேட்புமனுக்களைக் கோர முடியும்.
எதிர்வரும் ஜனவரி 9 ஆம் திகதி என்பது இறுதித் திகதி. அவர்கள் ஏன் இறுதித் திகதி வரை காத்திருக்க வேண்டும்? அதுவரை அவர்கள் காத்திருப்பது அரசின் நிலைப்பாட்டை அறிவதற்காக.
தேர்தலுக்குச் செல்வதற்கு அரசுக்கு விருப்பம் இல்லை” – என்றார்.
‘அரசு தேர்தலுக்கு அஞ்சுவதற்கான காரணம்?’ என்ற கேள்விக்கு அநுரகுமார பதிலளிக்கும் போது,
“இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று தேர்தலை எப்படி எதிர்கொள்வதென்ற பிரச்சினை. ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் சேர்ந்துதான் இந்த அரசை உருவாக்கியுள்ளார்கள்.
இதனால் தேர்தலை இணைந்து சந்திப்பதா? இல்லை பிரிந்து சந்திப்பதா? என்ற குழப்பம் இவர்களுக்கு உண்டு.
இணைந்து சென்றால் மக்கள் அதை விரும்பமாட்டார்கள். பிரிந்து சென்று ஆளை ஆள் எதிர்த்துப் போட்டியிடவும் முடியாது.
அடுத்து தோல்விப் பயம். இந்தத் தேர்தலில் அரசு நிச்சயம் தோல்வியடையும். அப்படி தோல்வியடைந்தால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் அந்தக் கதிரையில் இருக்க முடியாது. நாடாளுமன்றத் தேர்தலுக்குச் சென்றே ஆக வேண்டும்.
இதனால்தான் இவர்கள் தேர்தலுக்குச் செல்வதற்குப் பயப்படுகின்றார்கள். அதனால் தேர்தலை ஒத்திவைக்க அவர்கள் திட்டம் தீட்டுகின்றனர்
அரசின் இந்தச் சதித் திட்டத்துக்குத் தேர்தல்கள் ஆணையாளர் துணைபோகின்றார்” – என்றார்.