கிரிக்கெட் வர்ணைணயாளர் பிரையன் தோமசை சந்திக்க திட்டமிட்டிருந்தார் – விசாரணைகளில் தகவல்
இலங்கையின் பிரபல வர்த்தகரின் கொலை தொடர்பிலான ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் அவர் முன்னாள் கிரிக்கெட் வர்ணணையாளர் பிரையன் தோமசை சந்திக்கதிட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
தினேஸ் சாப்டர் இதனை தனது செயலாளருக்கு தெரிவித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாப்டருக்கும் பிரையன் தோமசிற்கும் இடையிலாக பணகொடுக்கல் வாங்களிற்கும் இந்த கொலைக்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
திட்டமிடப்பட்டு கொலை செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கலாம் என கருதுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தற்போது இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறிப்பிட்ட குற்றச்செயல் இடம்பெற்ற பகுதிக்கு இன்று காலை சிஐடியினர் சென்றுள்ளனர்.
தடயங்கள் ஏதாவது கிடைக்கின்றதா என பார்ப்பதற்காக பொரளை பொது மயானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படும் சிசிடிவியை ஆராயும் நடவடிக்கைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் சாப்டரின் வாகனம் பார்ம்வீதி ஊடாக மயானத்திற்குள் நுழைந்துள்ளமை தெரியவந்துள்ளது.
சாப்டரின் கார் விமானப்படையினரின் நினைவுத்தூபிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்ததை பொலிஸார் பார்த்துள்ளனர்.
சாப்டர் பிளவர்வீதியில் உள்ள தனது வீட்டிலிருந்து இரண்டு அல்லது மூன்று மணியளவில் கூட்டமொன்றிற்காக சென்றுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வர்ணணையாளர் பிரையன் தோமசை சந்திப்பதற்கு செல்வதாக அவர் தனது செயலாளரிடம் தெரிவித்துள்ளார்.
பிரையன் தோமல் சாப்டரிடமிருந்து 1.4 பில்லியன் கடன்பெற்றுள்ளார்.