பதவி விலகினார் கூட்டமைப்பின் பருத்தித்துறை நகர சபைத் தலைவர்! 

0
126
Article Top Ad
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை நகர சபையின் தலைவர் யோ. இருதயராஜா தனது பதவியை இன்று காலை இராஜிநாமா செய்துள்ளார்.
பருத்தித்துறை நகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான திருத்திய வரவு – செலவுத் திட்டம் இன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதங்கள் இடம்பெற இருந்தன. அதற்காகச் சபை காலை 9:30 மணிக்குக் கூடவிருந்தது.

இந்நிலையில், காலை 9:20 மணிக்கு வருகை தந்த நகர சபைத் தலைவர் யோ. இருதயராஜா, சபையின் செயலாளரிடம் தனது பதவி விலகல் கடிதத்தைக் கையளித்துவிட்டு வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து 9:35 மணியளவில் சபையைக் கூட்டிய பருத்தித்துறை நகர சபை செயலாளர், தலைவர் பதவி விலகியதைச் சபைக்கு அறிவித்ததுடன் அவர் பதவி விலகியது தொடர்பாக வர்த்தமானியில் பிரசுரித்து புதிய தவிசாளர் தெரிவாகும் வரை  சபை நடவடிக்கை இடம்பெறாது எனவும் தெரிவித்தார்.

திருத்திய வரவு – செலவுத் திட்டத்தை ஆளும் தரப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்ட சபையில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் உறுப்பினர்கள் பலர் ஒன்று சேர்ந்து மீண்டும் தோற்கடிக்கவுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தான் இன்று சபை அமர்வுக்கு முன்பதாகவே தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார் என்று இருதயராஜா அறிவித்துள்ளார்.

15 உறுப்பினர்களைக் கொண்ட பருத்தித்துறை நகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் கடந்த 5ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் 6 பேர், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவர் என 8 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துத் தோற்கடித்திருந்தனர்.

அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் 4 பேர், தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் ஒருவர், சுயேச்சைக் குழு உறுப்பினர் ஒருவர், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவர் என 7 பேர் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

இதையடுத்து இன்று திருத்தங்களுடன் சபையில் சமர்ப்பிக்கப்படவிருந்த வரவு – செலவுத் திட்டத்தையும் சபை உறுப்பினர்கள் பலர் தோற்கடிக்கத் திட்டமிட்டுள்ளனர் என்று வெளியான தகவலையடுத்து நகர சபைத் தலைவர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இரண்டாம் தடவையும் வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் தலைவர் பதவி வறிதாகும். அந்நிலையில், தோற்கடிக்கப்பட்டு தலைவர் பதவியை இழக்காது இருப்பதற்காகத் தலைவர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்  என்று சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.