உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்ளக் கட்சிகள் பல தயாராகி வருகின்றன. அந்தக் கட்சிகள் கூட்டணி அமைப்பது பற்றிப் பேசுவதும் வேட்பாளர்களை நியமிப்பதும் என தமது அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்கின்றன.
அந்தவகையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, விமல் வீரவன்ச அணி மற்றும் டலஸ் அழகபெரும அணி ஆகியவை ஒன்றிணைந்து கூட்டணியாகக் களமிறங்குவது பற்றிப் பேசி வருகின்றன.
அப்படியானால், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சின்னமான வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதென்ற ஒரு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சின்னம் இருப்பது சுதந்திரக் கட்சியில் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்தக் கூட்டணிக்கு யார் தலைவர் என்பதில்தான் சிக்கல் நிலவுகின்றது.
சின்னம் ‘வெற்றிலை’ எனில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அடிப்படையாக வைத்துத்தான் கூட்டணி உருவாகும்.
அதற்காக சு.கவின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவை கூட்டணிக்குத் தலைவராகப் போட முடியாது என்று டலஸ் அணி தெரிவித்துள்ளது.
அதற்குக் காரணம் ஈஸ்டர் தாக்குதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் அவர் மீது உள்ளமைதான்.
அதனால் புதிய தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று டலஸ் அணியினர் யோசனை தெரிவித்துள்ளனர்.
சுதந்திரக் கட்சி அதற்குத் தலை அசைத்துள்ளது. தனியாகத் தலைவர் ஒருவரை நியமிக்காமல் தலைமைத்துவ சபை ஒன்றை அமைப்பதற்கு யோசனை ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும், இது தொடர்பில் இறுதி முடிவெடுக்கப்படவில்லை.