மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டென்னிஸ் போட்டியில் ஜோகோவிக் வெற்றி

0
142
Article Top Ad

பிரஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டிகள் தற்போது பரீஸ் நகரில் உள்ள ரோலண்ட் கரோஸ் திடலில் நடைபெற்றுவருகின்றன. தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள போட்டிகளில் இன்றையதினம் ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் முதலில் நடைபெற்ற அரையிறுதியில் உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான கார்லோஸ் அல்கரஸ் 22 கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டங்களை வென்றவரான நொவாக் ஜோகோவிக்கை எதிர்கொண்டார். 20வயதுடைய அல்கரஸ் டென்னிஸ் உலகின் எதிர்காலமாக அவரது திறனுக்காக அடையாளப்படுத்தப்பட்டு புகழப்படுபவர்.

மிகக்குறுகிய காலத்தில் டென்னிஸ் உலகின்முதலாவது தர வரிசைக்கு முன்னேறியவர். கடைசியாக விளையாடிய கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க பகிரங்க போட்டிகளில் சம்பியன் பட்டம் வென்றவர். எனினும் இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற அவுஸ்திரேலிய பகிரங்கப் போட்டிகளில் காயங்காரணமாகப் பங்கெடுக்கவில்லை.

மறுமுனையில் ஜோகோவிக் கடந்த அமெரிக்க போட்டிகளில் கொவிட் தடுப்பூசி செலுத்தாமை காரணமாகப் பங்கேற்கவில்லை. ஆனால் வருடத்தொடக்கத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலியப் பகிரங்கப் போட்டிகளில் சம்பியன் பட்டம் வென்று தான் டென்னிஸ் விளையாட்டுலக வாழ்வில் வென்ற கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டங்களின் எண்ணிக்கையை 22ஆக அதிகரித்துக்கொண்டவர்.

இருவரும் மோதிக்கொண்டதால் இந்த அரையிறுதியாட்டம் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. இதில் முதலாவது செட் ஐ ஜோகோவிக் 6ற்கு 3 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றார். இரண்டாவது செட் ஐ கடும்போட்டிக்கு மத்தியில் அல்கரஸ் 7ற்கு 5 என்ற புள்ளிகள் கணக்கில் தனதாக்கினார். எனினும் மூன்றாவது செட்டில் உடல் உபாதைக்குள்ளானார் அல்கரஸ். இதன் பின்னர் தனது வேகத்தை அதிகரித்துக்கொண்ட ஜோகோவிக் 6ற்கு1 6ற்கு 1 என்ற செட்களில் மூன்றாம் நான்காம் செட்களை வென்று இறுதிப்போட்டிக்குத்தகுதிபெற்றார்.

70 வது கிராண்ட்ஸ்லாம் சுற்றுப்போட்டிகளில் விளையாடும் ஜோகோவிக்கிற்கு இது 34வது இறுதிப்போட்டியாகும். இதற்கு முன்னர் கிறிஸ் எவர்ட் என்ற வீராங்கனையே 34 தடவைகள் இறுதிப்போட்டிக்கு டென்னிஸில் முன்னேறியிருந்தார். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் வெற்றிபெற்றால் ஜோகோவிக் தனது 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றெடுப்பார்.