வீரவன்சவுடன் இணைந்து அரசுக்கு எதிராக சு.க. சதி மைத்திரி முன் போட்டுடைத்தார் பஸில்

0
255
Article Top Ad

 

 

“முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு நாம் எப்போதும் உதவுகின்றோம். எனினும், இந்தக் கட்சியிலுள்ள சிலர் அமைச்சர் விமல் வீரவன்சவுடன் இணைந்து அரசுக்கு எதிரான சதியில் ஈடுபட்டு வருகின்றனர்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநர் பஸில் ராஜபக்ச குற்றஞ்சாட்டினார்.

மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக கடந்த வாரம் பஸில் ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் முக்கிய பேச்சு நடைபெற்றது.

இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் இந்தக் குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார் என்று சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர,

தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண ஆகியோர் முன்னிலையில் இந்தக் குற்றச்சாட்டை பஸில் ராஜபக்ச முன்வைத்தார்.

இந்தப் பேச்சில் ஒரு மாகாண சபைத் தொகுதியில் கட்சி சார்பில் மூன்று வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று பஸில் ராஜபக்ச முன்வைத்த

யோசனையை சுதந்திரக் கட்சியினர் எதிர்த்ததை அடுத்தே அவர் மேற்படி குற்றச்சாட்டை சுமத்தினார்.

இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த சு.கவின் பொதுச்செயலாளரான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, தன் மீதே மேற்படி குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றது எனவும்,

தான் அவ்வாறான சதி நடவடிக்கையில் ஈடுபடவில்லை எனவும் கூறினார் – என்றுள்ளது.