உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பான முன்மொழிவு இன்று (28) பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்போது, குறித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த முன்மொழிவு பாராளுமன்றத்தின் நிதிக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள விசேட பாராளுமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
இதேவேளை உள்நாட்டு கடன் மறுசீரமைப்புத் தொடர்பில் அனைத்துகட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று இரவு 6 மணியளவில் கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.
கட்சித் தலைவர்களுக்கு மாத்திரம் பங்கேற்று ஆராயவிருந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தானும் அதில் கலந்துகொள்வதாக அறிவித்துள்ளார்.
அவருடன் இலங்கை மத்திய வங்கி ஆளுநரும் பங்கேற்கவுள்ளார். இந்தக் கூட்டத்தில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்புத் தொடர்பில் விளக்கமளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.