அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிடுவதில் சிக்கல்

0
82
Article Top Ad

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் முன்னோடி வேட்பாளராக உள்ளார். ஆனால் அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளன.

அதில் முக்கியமான வழக்கு, கேபிடால் கலவர வழக்கு. அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியை தழுவினார். ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால் டிரம்ப் தோல்வியை ஏற்காமல் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டினார். இந்த சூழ்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு சான்றிதழ் வழங்குவதற்காக 2021ம் ஆண்டு ஜனவரி 6-ந் தேதி பாராளுமன்றம் கூடியது. அப்போது டிரம்பின் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்குள் (கேபிடால் கட்டிடம்) புகுந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 7 பேர் பலியாகினர்.

டிரம்ப் ஆதரவாளர்களின் கிளர்ச்சியால் 7 பேர் இறந்ததாக செனட் அறிக்கை உறுதி செய்தது. கிளர்ச்சியைத் தூண்டியதற்காக டிரம்ப் பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் செனட் சபையால் விடுவிக்கப்பட்டார். எனினும், பாராளுமன்ற கட்டிடத்தில் தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பான கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுவருகிறார்.

இவ்வழக்கில் டிரம்ப், உத்தியோகபூர்வ நடவடிக்கைக்கு இடையூறு செய்தது, அரசாங்கத்தை ஏமாற்ற சதி செய்தது மற்றும் கிளர்ச்சியைத் தூண்டுயது ஆகிய 3 முக்கிய பிரிவுகளில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில் டிரூத் சோஷியல் (Truth Social) எனப்படும் தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் “ஜோ பைடனின் நீதித்துறையின் வழக்கறிஞர் ஜாக் ஸ்மித், ஜனவரி 6 ஆம் தேதி வழக்கின் விசாரணைக்கு நான் ஒரு “இலக்கு” என்பதால் விசாரணைக்கு நேரில் வர வேண்டும் என தெரிவித்திருக்கிறார்கள். அனேகமாக இது என் மீதான குற்றப்பத்திரிக்கை தாக்கலையும், என்னை கைது செய்யும் நடவடிக்கையையும் குறிக்கலாம்” என டிரம்ப் பதிவிட்டிருக்கிறார்.

மேலும் இது குறித்து ஒரு பேட்டியில் “என்னை இந்த நடவடிக்கை தொந்தரவு செய்கிறது. ஆனால் நான் பயப்படவில்லை. அவர்கள் மக்களை இழிவுபடுத்தவும், பயமுறுத்தவும் முயற்சிக்கிறார்கள். நாங்கள் அமெரிக்காவை மீண்டும் பெரிதாக மாற்றப் போகிறோம். சொல்வதற்கு அவ்வளவுதான் உள்ளது.” என்று தெரிவித்தார்.

வரும் நாட்களில அவரின் அரசியல் எதிர்காலம் எந்த திசையில் செல்லும் என்பதை இந்த வழக்கின் போக்கு முடிவு செய்யும் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.