இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நில இணைப்பு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்மொழியப்பட்டதாக இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவாத்ரா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2002 மற்றும் 2004ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பிரதமராக இருந்தபோது இரு நாடுகளுக்கும் இடையில் பாலம் அமைப்பதற்கு முன்மொழிவைக் கொண்டு வந்தார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புது டில்லியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர், இணைப்புத் திட்டங்களைப் பொறுத்தவரை, இலங்கை ஜனாதிபதியினால் இந்த யோசனை முன்மொழியப்பட்டதாக கூறியுள்ளார்.
இரு தலைவர்களும் இதை முன்னோக்கி எடுத்துச் செல்ல ஒப்புக்கொண்டனர். மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான நில இணைப்பு குறித்து ஆரம்ப சாத்தியக்கூறுகளை ஆய்வின் மூலம் இரு தரப்பும் அதை முன்னெடுத்துச் செல்வதாக பிரதமர் தனது செய்திக் குறிப்புகளில் கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரு நாடுகளும் கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறையில் கூட்டு ஒப்பந்தம் (JDI), புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கான ஒத்துழைப்பு ஒப்பந்தம் மற்றும் NIPL மற்றும் லங்கா Pay for UPI திட்டத்திற்கு இடையேயான பிணைய ஒப்பந்தம் ஆகிய ஐந்து ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் இந்தியா சென்றிருந்தார்.
இதன் போது இந்திய ஜனாதிபதி,பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டவர்களை சந்தித்து பேசியிருந்தார். மேலும் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலும் பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.