“13“ நாளை தீர்மானமிக்க பேச்சுவார்த்தை – தெற்கில் சில கட்சிகள் எதிர்ப்பு

0
100
Article Top Ad

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாளைய தினம் அனைத்துக் கட்சி கூட்டமொன்றுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமவிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் அனைத்து தமிழ் கட்சிகளும் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளன.

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் பிரதமர் மோடியால் கொடுக்கப்பட்ட கடும் அழுத்தத்தின் காரணமாக உடனடியாக இவ்வாறு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, நேற்யை தினம் அவசர சந்திப்பொன்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரன்,

13ஆவது திருத்தச்சட்டத்தில் மாகாண அரசிடமிருந்து பறிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறித்து முன்மொழிவொன்றை நாம் ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளோம். அது குறித்து ஆய்வுக்குட்படுத்த ஐவர் அடங்கிய விசேட குழுவொன்றை நியமிக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தோம். குறித் ஐந்து பேரின் பெயர்களையும் பரிந்துரைத்திருந்தோம்.

ஜனாதிபதி இந்த கோரிக்கைக்கு இணங்கியதுடன், மேலும் 3 அல்லது 4 பேரை குழுவில் உள்வாங்குவதாகவும் கூறினார். நாளைய தினம் பொலிஸ் அதிகாரத்தை எவ்வாறு வழங்குவது? ஏனைய அதிகாரங்களை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து கருத்து வெளியிட உள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.

இந்தியாவின் பாண்டிசேரியில் ஆயுதங்கள் இல்லாத பொலிஸார் உள்ளனர். தடிகளை மாத்திரமே அவர்கள் கையில் வைத்திருப்பார்கள். அவர்கள் போக்குவரத்து கண்காணிப்பு கடைகள் மற்றும் முறைப்பாடுகளை பதிவுசெய்தல், சுற்றுச்சூழல் கடமைகளில் ஈடுபடுகின்றனர். ஆயுதங்கள் இல்லாது இந்த அதிகாரத்தை வழங்குவது குறித்து விளக்கமளித்தேன்.

13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி அக்கறையுடன் செல்படுவதாக அவதானிக்க முடிகிறது என்றார்.

13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முழுயைாக தமது ஆதரவை வழங்குமென அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பு டார்லி வீதியில் உள்ள சு.கவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் கருத்து வெளியிடுகையில்,

13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற நிலைப்பாட்டில் ஆரம்பம்முதல் சு.க உறுதியாக உள்ளது.

ஆனால், அதில் உள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை நடைமுறைப்படுத்தும் போது அதற்கான உரிய பொறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.

2015 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்த சந்தர்ப்பங்களில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை நடைமுறைப்படுத்தும் போது அதற்கான வரையறைகள் இருக்க வேண்டுமென கூறியிருந்தோம். எமது முன்மொழிவுகளையும் அதற்காக வழங்கியிருந்தோம்.

அதிகாரப் பகிர்வை கட்டம்கட்டமாக மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால், அது தெற்கில் சிங்கள மக்களை பெரிதும் பாதிக்கும் ஒரு விடயமாக உள்ளது.

தமிழ், சிங்கள மக்களின் பிரச்சினைகளை முற்போக்காக காணும் ஒரு கட்சி என்ற அடிப்படையில் அதிகாரப் பகிர்வை கட்டம் கட்டமாக மேற்கொள்ள நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம் என்பதுடன், நாளையதினம் கூட்டத்திலும் கலந்துகொள்வோம் என்றார்.

இதேவேளை, இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் மொஹமெட் முஸாமில்,

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்தையே ஜனாதிபதி நடைமுறைப்படுத்தி வருகிறார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான காலம் கனிந்து வருவதால் வடக்கின் வாக்குளை வைத்துள்ள சுமந்திரன் உட்பட தமிழ் பிரிவினைவாதிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள பார்க்கின்றனர்.

அதிகாரப் பகிர்வின் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியுமென நாம் நம்பவில்லை. நல்லிணக்கம் மக்கள் மனங்களில்தான் ஏற்படுத்தப்பட வெண்டும்.

13 ஐ முழுமையாக அமுல்படுத்தினால் என்ன நடக்கும்?. கிழக்கில் தமிழ் , முஸ்லிம் மக்களிடையே காணி தொடர்பான முரண்பாடுகள் ஏற்படும். இதனால் தற்போது இருக்கும் நல்லிணக்கம் முழுமையாக அழிந்துபோய்விடும்” என்றார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தில், கலந்துகொள்ள போவதில்லையென தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளதுடன், நாளைய தினம் நடைபெறவுள்ள நடைபெறவுள்ள விசேட கலந்துரையாடலின் பின் தமது நிலைப்பாட்டை அறிவிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.