இலங்கையில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கறுப்பு ஜுலைக் இனக்கலவரத்தின் 40ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜுலை 23ம் திகதி விசேட அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.
“நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் 1983ம் ஆண்டு ஜுலை மாதத்தில் தமிழர்களுக்கு எதிராக இலங்கையின் பல பாகங்களிலும் இனக்கலவரம் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தது.இந்த இனக்கலவரத்தின் காரணமாக ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயங்களுக்குள்ளாகினர். இன்னமும் பலர் இடப்பெயர்விற்குள்ளானார்கள். பலர் பாலியல் வன்முறைகளுக்குட்படுத்தப்பட்டனர்.கறுப்பு ஜுலை மிலேச்சத்தனமானது விரிசலை அதிகப்படுத்தியதோடு பல தசாப்த கால ஆயுத மோதலுக்கு வழிவகுத்தது. இதனால் பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரிழக்க நேரிட்டதுடன் துயரவேதனையானது சமூகங்களை இன்றும் ஆட்கொண்டிருக்கின்றது.இந்த துயரமிக்க நாளில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்வதிலும் உயிர்பிழைத்தோரைக் கௌரவிப்பதிலும் வன்முறைக்கும் வெறுப்புக்கும் எதிராக எப்போதும் நிலைத்துநிற்பதற்கும் கனேடிய தமிழர்களுடனும் உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களுடனும் நாம் இணைந்துகொள்கின்றோம். இன்று நாம் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்கள் தொடர்பாக பொறுப்புக்கூறலுக்கு தொடர்ந்தும் வலியுறுத்துகின்றோம் . மனித உரிமைகளுக்காக முன்நிற்கும் விடயத்தை கனடா ஒருபோதும்நிறுத்திக்கொள்ளமாட்டாது ” எனவும் தனது அறிக்கையில் கனேடியப் பிரதமர் சுட்டிக்காட்டியிருந்தார்.
கனேடியப் பிரதமர் ஜுலை 23ம் திகதி விடுத்த அறிக்கையில் தமிழர் இனப்படுகொலை தினம் குறித்து கூறிய கூற்றை முற்றுமுழுதாக நிராகரிப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உள்ளுர் தேர்தல் வாக்கு வங்கி அரசியல் லாப நோக்கத்தை மாத்திரமே குறியாகக் கொண்டு கனடா இலங்கையின் கடந்த கால மோதல்கள் தொடர்பாக தவறானதும் திரிவுபடுத்தப்பட்டதுமான பிம்பத்தை தொடர்ந்தும் முன்னிறுத்திச்செல்வதாக அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் அனைத்துப்பாகங்களிலும் வாழ்கின்ற அனைத்து சமூகங்கள் மத்தியிலும் வெளிநாடுகளில் வாழ்கின்ற இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட சமூகங்கள் மத்தியிலும் ஸ்திரத்தன்மையையும் முன்னேற்றத்தையும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவதும் முயற்சிகளுக்காக கனடாவும் அதன் தலைவர்களும் இலங்கைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.