6 Sixers முதல் 600 விக்கட்கள் வரை : Stuart Broad கிரிக்கட் ஜாம்பவான் விட்டுச் செல்லும் நினைவுகள்

0
145
Article Top Ad

 

அவுஸ்திரேலியாவுடனான ஐந்தாவதும் இறுதியுமான கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாளான சனிக்கிழமையன்று இந்தப் போட்டியுடனே சர்வதேசக் கிரிக்கட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்த இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் வெற்றிக்குத் தேவையான கடைசி இரண்டு விக்கட்டுக்களையும் வீழ்த்தி மகத்தான முறையில் சர்வதேச கிரிக்கட்டிலிருந்து பிரியாவிடைபெற்றுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கட்டில் அவர் துடுப்பாட்ட வீரராக கடைசியாக அடித்த பந்து சிக்ஸராகவும் கடைசியாக வீசிய பந்து வெற்றியை உறுதிசெய்யும் விக்கட்டாகவும் அமைந்தமை சிறப்பம்சமாகும்.

இங்கிலாந்து அணிக்காக டி20 போட்டிகளினூடாக 2006ம் ஆண்டு சர்வதேச அறிமுகத்தை மேற்கொண்ட ஸ்டுவர்ட் பிராட் விடைபெறும் போது டெஸ்ட் கிரிக்கட் ஜாம்பவானாக விடைபெறுகின்ற பின்னணியில் போராடும் குணத்தின் உச்சம் வெளிப்பட்டு நிற்கின்றது.

2007ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதன் முறையாக அறிமுகமாகிய இங்கிலாந்திற்கு எதிராக இன்று நிறைவடைந்த ஐந்தாவது ஆஷஸ் போட்டியில் நிறைவடைந்த டெஸ்ற் கிரிக்கட் வாழ்வில் ஒட்டுமொத்தமாக ஸ்டுவர்ட் பிராட் 167 போட்டிகளில் விளையாடி 604 விக்கட்டுக்களை வீழ்த்தியமையே அவர் டெஸ்ற் ஜாம்பவானாக புகழப்படக் காரணமாக அமைந்தது.

டெஸ்ற் கிரிக்கட் வரலாற்றில் 600ற்கு மேற்பட்ட விக்கட்டுக்களை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை தனது நீண்டகால சகா ஜேம்ஸ் அண்டர்ஸனுக்கு பின்னர் நிலைநாட்டியமை மகத்தான சாதனையாகும்.

தனது தந்தை வழியில் கிரிக்கட் வாழ்க்கையை துடுப்பாட்ட வீரராக ஆரம்பித்த ஸ்டுவர்ட் பிராட் அபரீத உடல்வளர்ச்சி காரணமாக பயிற்சியாளரின் ஆலோசனையை அடுத்து 17 வயதில் வேகப்பந்துவீச்சாளராக மாறினார்.

தனது 20வயதிலே மிகவும் உற்சாகமாக டி20 போட்டிகளில் அறிமுகமான ஸ்டுவர்ட் பிராட்டிற்கு அடுத்தாண்டிலேயே 2007ல் நடைபெற்ற டி20 உலகக்கிண்ண போட்டிகள் மிகவும் கசப்பானதாக வாழ்க்கைப் பாடமாக அமைந்தது. இந்தியாவுடனான குழுநிலைப் போட்டியில் ஸ்டுவர்ட் பிராட் வீசிய ஒரு ஓவரிலே ஆறுபந்துகளையும் சிக்ஸர்களாக மாற்றி யுவராஜ் சிங் 36 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

போராடும் குணமற்ற வீரராக மட்டும் இருந்திருந்தால் பிராட் அதன் பின்னர் சர்வதேசப் போட்டிகளில் இருந்து காணாமல் போயிருப்பார். ஆனால் தன்னம்பிக்கையை வரவழைத்துக்கொண்டு இடைவிடாப் பயிற்சி மற்றும் கடும் உழைப்புடன் செயற்பட்டதனால் ஒரு கிரிக்கட் ஜாம்பவானாக இன்று விடைபெற்றிருக்கின்றார் என்றால் மிகையாகாது.