13 ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி செயலகத்துக்கு 3 வேறுபட்ட பரிந்துரைகள்!

0
116
Article Top Ad

அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் கட்சித் தலைவர்களிடம் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலர் கோரியுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகளிடமிருந்து 3 வேறுபட்ட நிலைப்பாடுகள் முன்வைக்கப்படவுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வகட்சிக் கூட்டத்தில் 13 தொடர்பில் ஆராயப்பட்டாலும் இறுதி முடிவு எடுக்கப்பட்டிருக்கவில்லை. இந்தநிலையில் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் கட்சித் தலைவர்களிடம் 13ஆவது திருத்தம் தொடர்பில் யோசனைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதியின் செயலரால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனிடம் கேட்டபோது, “நாம் புதிய அரசமைப்புத் தொடர்பிலேயே யோசனையை முன்வைப்போம்” – என்று பதிலளித்தார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கேட்டபோது, “13ஆவது திருத்தத்தை நிராகரிப்பதற்கான காரணங்களைக் குறிப்பிடுவதுடன், கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்காக ரொமேஷ் டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவிடம் கையளித்த அரசியல் தீர்வுத் திட்ட யோசனையை முன்வைப்போம்.” – என்றார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கேட்டபோது, “அவர்கள் எவ்வாறான பரிந்துரைகளை எதிர்பார்க்கின்றார்கள் என்பதில் தெளிவில்லாமல் உள்ளது. நாம் ஏற்கனவே இடைக்கால சபை தொடர்பான யோசனைகளை முன்வைத்துள்ளோம். அவர்கள் எதை எதிர்பார்க்கின்றார்கள் என்பது தெளிவானால் மேலதிகமான விடயங்களை முன்வைப்போம்.” – என்றார்.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் கேட்டபோது, “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் 13 ஐ முழுமையாக – 1987 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டபோது இருந்தவாறு நடைமுறைப்படுத்துமாறு கோரியிருந்தோம். எனவே, 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துமாறுதான் நாங்கள் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்போம்.” – என்றார்.
………………….