வடக்கிற்கு ‘பொலிஸ் அதிகாரம்’ – கூட்டமைப்புடன் பொது பாதுகாப்பு அமைச்சர் அவசர சந்திப்பு

0
77
Article Top Ad

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பொலிஸ்மா அதிபர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்ப அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

அரசியல் அமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரப் பகிர்வு தொடர்பான கவலைகளை நிவர்த்தி செய்வதற்கும் சாத்தியமான தீர்வுகளை ஆராயும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொலிஸ் அதிகாரங்களைக் கோரியமைக்கான காரணங்களை அமைச்சர் டிரான் அலஸ் கேட்டறிந்தார்.

இதற்குப் பதிலளித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரித்தானியா, இந்தியா போன்ற வளர்ந்த நாடுகளில் அதிகாரப் பகிர்வு மிகச் சிறந்த முறையில் பேணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில், அந்த நாடுகளில் பயன்படுத்தப்படும் இத்தகைய முறைமைகளை இலங்கையிலும் நடைமுறைப்படுத்த முடியும் என விளக்கமளித்துள்ளனர்.

இலங்கையின் அரசியல் மற்றும் சமூக கலாசாரம் அந்த நாடுகளில் இருந்து கணிசமாக வேறுபடுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் அதிகாரங்களை பிரிக்காமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாற்று வழிகளை தேட வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தினார்.

தமிழ் மக்களும் அரசியல் தலைவர்களும் கோரிய 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் அமைச்சர் டிரான் அலஸ் கேள்வி எழுப்பினார்.

மாவட்டக் குழுக்களின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நீண்ட தூரத்தில் இருந்து கொழும்புக்கு வர வேண்டியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

சில ஆளுநர்களின் முடிவுகளை செயல்படுத்துவது தொடர்பான பிரச்சினைகளையும் அவர்கள் முன்னிலைப்படுத்தினர்.

மேலும், தற்போதுள்ள தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு மேலதிகமாக மாகாண பொலிஸ் ஆணைக்குழுவொன்றை நியமிப்பதன் முக்கியத்துவத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வட பிராந்தியத்தில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை, கடத்தல் மற்றும் குற்றச்செயல்கள் அதிகரித்துவது குறித்தும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், போதைப்பொருள் மற்றும் பாதாள உலக அமைப்புகளுக்கு எதிராக செயற்படும் விசேட பொலிஸ் குழுவிற்கு இந்த விடயங்கள் தொடர்பான உரிய தகவல்கள் பகிரப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு உறுதியளித்தார்.

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற ஊறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன் இராசமாணிக்கம், தர்மலிங்கம் சித்தார்த்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.