வட,கிழக்கில் விகாரைகள் கட்டப்படுவதை தடுக்க முயல்பவர்களின் தலைகளை சுமந்துகொண்டுதான் களனிக்கு வருவேன்

0
81
Article Top Ad

நான் வடக்கு, கிழக்குக்கு வருவேன், நீங்கள் விகாரைகளை தடுக்க முற்பட்டால், மகா சங்கத்தினர்மீது கை வைக்க முயன்றால் நான் களனிக்கு சும்மா திரும்பி வரமாட்டேன், உங்களின் தலைகளை கையில் சுமந்து கொண்டுதான் களனிக்கு வருவேன்.” என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமெனில் இந்நாட்டில் உள்ள கள்வர்களை பிடிக்க வேண்டும், திருடர்கள், கமிஷ்காரர்களை விரட்ட வேண்டும்.” எனவும் மேர்வின் வலியுறுத்தினார்.

“நாட்டில் மின்சாரம் இல்லை, விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, நீர் கட்டணம் அதிகரித்துள்ளது. நிலைமை இப்படி இருக்க நுவரெலியாவில் ராஜபக்ச குடும்பம் கிரிக்கெட் விளையாடுகின்றது, இது விளையாடக்கூடிய நேரமா” – எனவும் மேர்வின் கேள்வி எழுப்பினார்.

இலங்கை அரசியலில் சர்ச்சைக்குரிய அரசியல் வாதியாகவே மேர்வின் சில்வா வலம் வருகின்றார். ஊடக நிறுவனத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியமை, அரச ஊழியரை மரத்தில் கட்டிவைத்து தாக்கியமை, முன்னேஸ்வரம் ஆலயத்துக்குள் புகுந்து வேள்வி பூஜையை தடுத்து நிறுத்தியமை என அவரின் அடாவடி செயற்பாடுகளை பட்டியலிடலாம்.

ராஜபக்சக்களின் சகாவாக அவர்களின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மேர்வின் சில்வா, 2015 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்த பின்னர் பொதுத்தேர்தலில் போட்டியிட எந்தவொரு கட்சியும் இடமளிக்கவில்லை. இதனால் அரசியல் ரீதியில் ஓரங்கட்டப்பட்டார்.

பின்னர் தனது மகனுடன் இணைந்து மக்கள் சேவை எனும் கட்சியையும் ஆரம்பித்தார். ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். பொதுத்தேர்தலில் அநுராதபுரம் மாவட்டத்தில் களமிறங்கினார். அதன்பின்னர் சுதந்திரக்கட்சி பக்கம் தாவினார். தற்போது எந்த கட்சி என தெளிவில்லை.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை அம்மையார் இலங்கை வந்திருந்தபோது, அவருக்கு திருமண அழைப்பு விடுத்து நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியவர்தான் இந்த மேர்வின் சில்வா. இறுதியில் அது மேர்வினின் தனிப்பட்ட கருத்து எனக்கூறி மஹிந்த அரசுக்கு அப்போது மன்னிப்பு கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டது.