ஜப்னா கிங்ஸ் படுதோல்வி : ப்ளே ஓப் செல்வதிலும் சிக்கல்

0
76
Article Top Ad

காலி அணிக்கு எதிரான போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், ப்ளே ஓப் சுற்றுக்கு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

லங்கா பிரீமியர் லீக் தொடரின் 17 வது போட்டியாக காலி டைட்டன் மற்றும் ஜப்னா கிங்ஸ் அணிகள் மோதியிருந்தன.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் ஜப்னா அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்றிருந்தது.

முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்த ஜப்னா அணியின் வீரர்கள் மிகவும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் வெறும் 89 ஓட்டங்களை மாத்திரம் ஜப்னா அணியால் பெற்றுக்கொள்ள முடிந்தது.

முன் வரிசை மற்றும் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்துடன் பெவிலியன் திரும்பினர் துனித் வெல்லலகே மாத்திரம் ஓரளவு சிறப்பாக துடுப்பெடுத்தாடி 22 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

காலி அணி சார்பில் கசுன் ராஜித நான்கு விக்கெட்டுகளையும், லஹிரு குமார மற்றும் தப்ரைஸ் ஷம்சி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

இதனையடுத்து 90 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய காலி அணி 13.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மாத்திரம் இழந்த வெற்றி இலக்கை அடைந்தது.

காலி அணி சார்பில் டிம் சீஃபர் 55 ஓட்டங்களை பெற்றிருந்தார். இந்த போட்டியின் ஆட்டநாயகனாக கசுன் ராஜித தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

நடப்பு சம்பியனான ஜப்னா அணி இந்த தொடரில் பெரிதாக சோபிக்கவில்லை. இறுதியாக விளையாடிய அனைத்து போட்டிகளிலும் ஜப்னா அணி தோல்வியை சந்தித்துள்ளது.

புள்ளிப்பட்டியலில் ஆறு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் ஜப்னா அணி அனைத்து லீக் போட்டிகளிலும் விளையாடி முடித்துள்ள நிலையில் ப்ளே ஒப் சுறுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனினும், காலி அணிக்கு ஒரு லீக் போட்டியும், கொழும்பு அணிக்கு இரண்டு லீக் போட்டிகளும் எஞ்சியுள்ளது. கொழும்பு அணி இரு போட்டிகளிலும் வெற்றிபெற்றால் ப்ளே ஓப் சுற்றுக்கு தகுதி பெறமுடியும்.

எவ்வாறாயினும், காலி, கொழும்பு மற்று ஜப்னா அணிகளில் ப்ளே ஓப் சுற்றை உறுதி செய்வதில் நிகர ஓட்ட வீதம் முக்கியமாக அம்சமாக காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.