ஜூலை மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 7.44% ஆக உயர்ந்துள்ளதாக இந்தியாவின் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து மாதத்தில் முதல்முறையாக இவ்வாறு சில்லறை பணவீக்கம் பாரிய அளவில் உயர்வடைந்துள்ளதாக கூறும் ரிசர்வ் வங்கியின் தரவுகள், ரிசர்வ் வங்கியின் 2-6 என்ற இடைப்பட்ட நிர்ணய வீதத்தையும் ஜுலை மாத சில்லறை பணவீக்கம் கடந்துள்ளது.
இந்தியாவின் நுகர்வோர் அடிப்படையிலான விலைக் குறியீடு அல்லது ஜூலை மாதத்தில் சில்லறை பணவீக்கம் ஜூன் மாதத்தில் 4.87 வீதமாக இருந்து. இது 2.57 வீதம் அதிகரித்து ஜுலையில் 7.44 வீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த மாதத்தில் மரக்கறிகளின் விலைகள் கடுமையாக உயர்ந்தமையே பணவீக்க அதிகரிப்புக்கு காரணமாகவுள்ளது.
53 பொருளாதார வல்லுனர்களிடம் ராய்ட்டர்ஸ் (reuters) நடத்திய கருத்துக் கணிப்பில், இவ்வாண்டு இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் பணவீக்கம் 6.40 சதவீதம் வரை உயரும் என மதிப்பிட்டுள்ளது.
நுகர்வோர் உணவு விலைக் குறியீடு (CFPI) ஜூன் மாதத்தில் 4.49 வீதத்தில் இருந்து 11.51 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஜூலை மாதத்தில் இந்தியாவின் கிராமப்புற பணவீக்கம் 4.78 வீதத்திலிருந்து ஜூலையில் 7.63 வீதமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் நகர்ப்புற பணவீக்கம் 4.96 வீதத்திலிருந்து 7.20 வீதமாக உயர்ந்துள்ளது.
ரிசர்வ் வங்கி தனது ஆகஸ்ட் மாத நிதிக் கொள்கை மதிப்பாய்வில் கொள்கை விகிதங்களை 6.50 வீதமாக மாற்றியமைத்த பின்னரே இந்த புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன.
பணவீக்கம் அதிகரிப்பால் மரகறிகளின் விலைகள் அதிகரித்து வருவதால், அடுத்த ஓரிரு மாதங்களில் மேலும் இவற்றின் விலைகள் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்தியாவில் மரகறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பானது இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துமென பொருளாதார ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்தியாவில் இருந்து முட்டை, வெங்காயம், சில மரக்கறி வகைகள் மற்றும் பல்வேறு அத்தியாவசியப் பொருட்களை இலங்கை இறக்குமதி செய்கிறது.
சில்லறை பணவீக்கம் அதிகரித்துவருவதால் இந்தியாவில் இருந்து எதிர்காலத்தில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடுமென கூறும் பொருளாதார நிபுணர்கள், இது இலங்கை மக்களின் வாழ்க்கை செலவை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் கருதுகின்றனர்.
அண்மையில் பாஸ்மதி தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளை ஏற்றுமதி செய்யவும் இந்தியா தடைவிதித்துள்ளது. இந்தியாவில் இருந்தே கடந்த காலத்தில் இலங்கை சில அரிசி வகைகளை இறக்குமதி செய்துவந்தது. தற்போது இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுவரும் தளம்பல் நிலை இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.