50 ஓவர்கள் ஒரு நாள் உலகக்கிண்ணப் போட்டிகள் இந்தியாவில் ஆரம்பமாவதற்கு இன்னமும் 50ற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் உலகக்கிண்ணத்தில் பங்கேற்கும் நாடுகள் தத்தம் அணிகளை அறிவிக்கத்தொடங்கியுள்ளன.
இதில் 2019ம் ஆண்டில் உலகக்கிண்ணத்தை வென்று தற்போது நடப்புச்சம்பியன்களாகத் திகழும் இங்கிலாந்து அணியின் குழாம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கட் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து பணிச் சுமையைக் கருத்தில் கொண்டு 2022ம் ஆண்டு ஜுலை மாதத்தில் ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்த பென் ஸ்டோக்ஸ், தற்போது உலகக்கிண்ணத்தை தக்கவைப்பதற்காக ஓய்வுஅறிவிப்பை வாபஸ் பெற்றுக்கொண்டு மீண்டுமாக களமிறங்கியிருப்பது அணியை வலுமிக்கதாக மாற்றியுள்ளது.
2019ம் ஆண்டில் இங்கிலாந்து அணி உலகக்கிண்ணத்தை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் பென் ஸ்டோக்ஸ் . நியூஸிலாந்திற்கெதிரான இறுதிப் போட்டியில் அவர் ஆட்டநாயகனாகவும் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதுபோன்றே 2022 நடைபெற்ற டி20 உலகக்கிண்ண போட்டிகளிலும் இங்கிலாந்து கிண்ணம் வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தவர் ஸ்டோக்ஸ்.ச
கல துறை வீரர்களால் நிறைந்த இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸின் மீள் வருகை நிச்சயமாக வலுச்சேர்க்கும் என்றால் மிகையல்ல. நெருக்கடியான கட்டங்களில் போராடி அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய விரல் விட்டெண்ணக்கூடிய வீரர்களில் ஒருவராக பென் ஸ்டோக்ஸ் திகழ்கின்றமையால் இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண போட்டிகளில் இங்கிலாந்து மீண்டுமாக கிண்ணத்தை வென்றெடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. குறைந்தபட்சம் அரையிறுதிவரையேனும் இங்கிலாந்து முன்னேறும் என்பதை அணியில் இடம்பெற்றுள்ளவீரர்களும் அவர்கள் காண்பித்த ஆற்றல் வெளிப்பாடுகளும் உணர்த்தி நிற்கின்றன.