ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஜனாதிபதி 13ஆவது திருத்தச்சட்டத்தை கையில் எடுத்துள்ளார்.
அதிக அதிகாரப் பகிர்வை தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் விரும்பினாலும், அதனை தென்னிலங்கையில் உள்ள பெரும்பான்மை சிங்கள சமூகத்தினர் விரும்பவில்லை.
தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு அதிகாரமளிப்பது ஜனாதிபதிக்கு தேர்தல் ரீதியாக இலாபகரமானதாக இருக்காது. பெரும்பான்மை சமூகத்தை திருப்திப்படுத்தாத எந்தவொரு முடிவும் அவருக்கு அரசியல் ரீதியாக பின்னடைவையே கொடுக்கும்.
அதிகாரப் பகிர்வு
“13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதே ஜனாதிபதி விக்ரமசிங்கவின் விருப்பமாகும். அரசியலமைப்புச் சட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தால், அதை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பது அவரது வாதம். இது மக்களின் விருப்பதற்கு மாறாகவும் பாராளுமன்றத்தின் நிலைப்பாட்டுக்கு மாறாகவே இருந்தால் அதை அரசியல் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும்.
மாகாண சபைகளுக்குள் அதிகாரப் பகிர்வு என்பது 13வது திருத்தத்தின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. அதை நாம் புறக்கணிக்க முடியாது. நிறைவேற்று மற்றும் நீதித்துறை ஆகிய இரண்டும் அரசியலமைப்பின் விதிகளை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளன” என்று ஜனாதிபதி கடந்த வாரம் பாராளுமன்றத்தில் கூறினார்.
அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்வதற்கு முன்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடன் ஜனாதிபதி சந்தித்திருந்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான கலந்துரையாடலின் போது, இலங்கையில் அனைத்து சமூகங்களும் கௌரவமாக வாழக்கூடிய வகையில் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு புதுடெல்லி ஆர்வமாக உள்ளதாக பிரதமர் மோடி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சுட்டிக்காட்டினார்.
13வது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்துக்கு ஏனைய அரசியல் கட்சிகளின் பதில்களும் அவதானம் செலுத்தப்பட வேண்டியவையாக உள்ளது. தெற்கின் பெரும்பாலான கட்சிகள் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வடக்கு மாகாணத்துக்கு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
என்றாலும், 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவதன் ஊடாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை முழுமையாக பெற்றுக்கொள்ள முடியுமென ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, கொள்கையளவில் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளது. எவ்வாறாயினும், மாகாண சபைத் தேர்தல் முதலில் நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்தன் மூலம் அது தனது நிலைப்பாட்டில் ஒரு இறுக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை கொண்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பதில் மிகவும் சுவாரசியமானது. இக்கட்சியில் கருத்துக்கள் பிளவுபட்டுள்ளன. சிலர் முழு அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவாகவும், ஒருசிலர் எதிரான கருத்தையும் கொண்டுள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விடயம் தொடர்பில் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார்.
ஜனாதிபதியின் நீண்ட உரையானது அதிகாரப் பகிர்வு விடயத்தில் அவர் கொண்டிருந்த ஆழமான புரிதலை பிரதிபலித்தது மற்றும் அதற்கான பாதையை கோடிட்டுக் காட்டியதுடன் தேவையான அரசியலமைப்பு பதில்களை விவரிக்கிறது.
1987ஆம் ஆண்டு ஜூலையில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவுக்கும் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இடையிலான இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
நாட்டின் முன்னேற்றம்
நாட்டில் தற்போது செயற்படும் மாகாண சபை முறைமை பற்றிய முழுமையான மற்றும் நுண்ணறிவுமிக்க ஆய்வில், மாகாணங்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தாலும், நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ள பல குறைபாடுகள் உள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டிருந்தார்.
“1987ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க மாகாண சபைச் சட்டத்தில் மாகாண சபைகளின் பொறுப்புகள் தொடர்பில் துல்லியமான வரையறைகள் இல்லை. இதன் விளைவாக, தவறான புரிதல்கள், பிரச்சினைகள் மற்றும் குழப்பங்கள் ஏற்படலாம். இதனை நிவர்த்தி செய்வதற்கு மாகாண சபை சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.
இந்தக் குறைபாடுகள் ஏற்கனவே 2017ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சபையின் வழிநடத்தல் குழுவினால் இனங்காணப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளதையும் ஜனாதிபதி தமது உரையில் நினைவு கூர்ந்திருந்தார். இவற்றை மறுசீரமைப்பதற்கு அரசியலமைப்பின் 3,4 மற்றும் 5 ஆகிய உறுப்புரைகளில் திருத்தங்கள் தேவைப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு நிறைவேற்று ஜனாதிபதி என்ற அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு ஜனாதிபதியை வலியுறுத்துபவர்களுக்கும் அந்த அறிவிப்பு ஒரு பதிலை வழங்குகிறது. இதை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசியலமைப்பு திருத்தங்கள் மற்றும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படுவதால் இதை செய்ய முடியாது.
ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் முன்மொழிவுகளின் முழுமையான தாக்கம் எதிர்வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் உணரப்படும். அரசியல் கட்சிகள் மற்றும் சித்தாந்தம் எதுவாக இருந்தாலும், ஜனாதிபதியின் கோரிக்கைக்கு பதில் அளிக்க வேண்டும், ஏனெனில் இது வரவிருக்கும் தேர்தல்களில் முக்கிய தேர்தல் பிரச்சினையாக வெளிப்படும்.
13வது திருத்தம் அரசியலமைப்பில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, அரசியல் கட்சிகள் எப்போதும் ஒன்றையொன்று எதிர்த்து வந்துள்ளன.
13வது திருத்தம் கொண்டுவரப்பட்டு முப்பத்தாறு வருடங்களுக்கு மேலாகியும், அரசியலமைப்பில் இது செயலற்று உள்ளது. இதன் விளைவாக முப்பது வருட கால யுத்தத்தின் பின்னர் தங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பிரதேசங்கள் உணர்கின்றன.
ஆகவே, 13ஆவது திருத்தச்சட்டம் என்பது எளிதில் அடுல்படுத்துவிடக்கூடிய சட்டம் அல்ல. ஆனால், தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி இதுதொடர்பில் ஆக்கப்பூர்வமான நகர்வுகளில் ஈடுபடுவதும் கட்டாயமாகியுள்ளது.