இலங்கை மத்திய வங்கியின் (CBSL) 2022 வருடாந்த அறிக்கையின்படி, வெளிநாட்டு வேலைக்கான புறப்பாடுகள் கடந்த ஆண்டு 154.4 சதவீத கணிசமான அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டு 122,264 ஆக இருந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான புறப்பாடுகள் 2022 ஆம் ஆண்டு 311,056 ஆக குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
2022 ஆம் ஆண்டில் நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காகப் புறப்படுவோர் கணிசமாக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளியேறும் ஆண் மற்றும் பெண்களின் எண்ணிக்கை முறையே 60.1 சதவீதம் மற்றும் 39.9 சதவீதம் ஆகும்.
தொழில்முறை, நடுத்தர நிலை, திறமையான, அரை- திறமையான, திறமையற்ற மற்றும் வீட்டுப் பணிப்பெண் போன்ற அனைத்து பிரிவுகளின் கீழும் புறப்பாடுகள் அதிகரித்துள்ளன.
மத்திய கிழக்கு பிராந்தியம் 2022 ஆம் ஆண்டிலும் முக்கிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு இடமாக இருந்துள்ளது.
வெளிநாட்டு வேலைக்கான மொத்தப் புறப்பாடுகளில் 84.7 சதவிகிதம், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளனர்.