சிங்கப்பூர் ஜனாதிபதித் தேர்தலில் மும்முனைப் போட்டி: அந்த நாட்டின் ஜனாதிபதியாக மீண்டும் தமிழர் மகுடம் சூட வாய்ப்பு !

ஆகஸ்ட் 31ஆம் திகதி பிரசார ஓய்வுநாள்; செப்டம்பர் 1ஆம் திகதி வாக்குப்பதிவு

0
128
Article Top Ad

 

சிங்கப்பூர் அரசாங்க முதலீட்டு நிறுவனத்தின் முன்னாள் முதலீட்டுத் தலைவர் இங் கொக் சொங் 75, முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் 66 என்டியுசி இன்கம் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி டான் கின் லியான் 75 ஆகியோர் சிங்கப்பூர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அவர்கள் மூவரும் செவ்வாய்க்கிழமை தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

தேர்தல் அதிகாரி டான் மெங் டுயி நேற்று முன்தினம் பிற்பகல் 12.39 மணிக்கு அம்மூவரையும் வேட்பாளர்களாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

நண்பகல் 12 மணி காலக்கெடுவிற்கு முன்னரே அவர்கள் மூவரும் ஜாலான் புசாரில் உள்ள மக்கள் கழகத் தலைமையகத்தில் அமைந்திருக்கும் வேட்புமனுத் தாக்கல் நிலையத்தைச் சென்றடைந்தனர்.

இப்போது வேட்பாளர்கள் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதால் அவர்கள் ஜனாதிபதித் தேர்தல் போட்டியிலிருந்து விலகினால் 40,500 என்ற தேர்தல் வைப்புத்தொகையை இழந்துவிடுவர்.

சிங்கப்பூரின் ஒன்பதாவது ஜனாதிபதியாகத்  தேர்ந்தெடுக்கப்படுவதற்குப் போட்டியிடும் மூவரும் அதிகாரபூர்வமாகத் தங்களின் பிரசாரத்தைத் தொடங்கலாம்.

ஆகஸ்ட் 31ஆம் திகதி பிரசார ஓய்வு நாள். ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 1ஆம் திகதி நடைபெறும்.

இதற்கிடையே வேட்புமனுத் தாக்கல் நிலையத்தில் கூடியிருந்தவர்களிடம் ஆற்றிய இரண்டு நிமிட உரையில் நாட்டைத் தனித்துவம் வாய்ந்த ஒன்றாக வெளிக்காட்டும் சிங்கப்பூரின் மூன்று தேசிய பொக்கிஷங்களைப் பாதுகாப்பதற்காக ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிடுவதாக திரு இங் கூறினார்.

முதல் பொக்கிஷம் சிங்கப்பூரின் இருப்புகள். தாம் வேலைசெய்த காலம் முழுவதையும் அரசாங்க முதலீட்டு நிறுவனத்திலும் சிங்கப்பூர் நாணய ஆணையத்திலும் கழித்ததால் சிங்கப்பூரின் இருப்புகளைத் தம்மால் பாதுகாக்க முடியும் என்றார் அவர்.

நல்ல பொது நிர்வாகமும் சமூக நிலைத்தன்மையும் அவர் குறிப்பிட்ட மற்ற இரு பொக்கிஷங்கள்.

‘நான் எந்தக் கட்சியையும் சாராதவன். அதனால் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்குவதற்கு சிங்கப்பூர் மக்களை ஒன்றிணைக்க நான் சரியான இடத்தில் இருக்கிறேன்’ என்று திரு இங் கூறினார்.