திருகோணமலையில் பல்வேறு திட்டங்களில் முதலீடுகளை மேற்கொள்ள இந்தியா தீவிர ஆர்வம் காட்டிவருவதுடன், அதற்கான பலகட்ட பேச்சுவார்த்தைகளையும் இலங்கையுடன் நடத்தியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தில் திருகோணமலையில் இந்தியா மேற்கொள்ளவுள்ள முதலீடுகள் மற்றும் இலங்கையில் இந்தியா முன்னெடுக்க விரும்பும் திட்டங்கள் குறித்து ஆழமான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
குறிப்பாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எரிவாயு குழாய் இணைப்புத் திட்டம், நிலத் தொடர்பை ஏற்படுத்தும் திட்டம், இருநாடுகளும் இடையிலான கப்பல் போக்குவரத்தையும் விமானப் போக்குவரத்தையும் விரிவுப்படுத்தும் திட்டங்கள், திருகோணமலை உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்தியா முன்னெடுக்க விரும்பும் திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருந்தன.
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தை தொடர்ந்து தொடர்ச்சியாக முதலீட்டாளர்களும் இலங்கையில் முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில், கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மையப்படுத்தி இந்தியா படகு சேவைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதுடன், அதற்கான பேச்சுவார்த்தைகளும் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாக அறிய முடிகிறது.
கேரளாவில் முன்னெடுக்கப்படும் படகுசேவையால் பாரிய வருமானத்தை சுற்றுலாத்துறை மூலம் கேரள அரசாங்கம் பெற்றுக்கொள்கிறது. இலங்கையில் கிழக்கு கடல்பரப்பும் இயற்கை நிறைந்த பகுதியாக இருப்பதால் இந்திய அரசாங்கம் கேரள பாணியிலான இத்திட்டத்தை முன்னெடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது.
ஏற்கனவே, திருகோணமலையில் உள்ள எண்ணெய் குதங்களை மீள சுத்திகரித்து இயக்குவதிலும் இந்திய அரசாங்கம் ஆர்வங்காட்டி வருவதுடன், திருகோணமலை துறைமுகத்தையும் அபிவிருத்தி செய்யும் யோசனைகளை முன்வைத்துள்ளது.
மறுபுறும் திருகோணமலை துறைமுகத்தின் மீது அமெரிக்காவும் தமது ஆதிக்கத்தை செலுத்த பல்வேறு முயற்சிகளை கடந்தகாலத்தில் மேற்கொண்டிருந்தது.
இதேவேளை, சீனாவும் ஜப்பானும் கிழக்கு மாகாணத்தில் பல்வேறு முதலீடுகளை மேற்கொள்வதில் அவதானம் செலுத்தியுள்ளன.
திருகோணமலை Sober Island பகுதியில் கேபிள் கார் திட்டத்தை முன்னெடுக்கும் யோசனையை சீனாவின் முக்கிய நிறுவனமொன்று இலங்கை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக அறிய முடிகிறது. என்றாலும், இத்திட்டத்துக்கான அனுமதிகள் இன்னமும் வழங்கப்படவில்லை.
அம்பாறை அருகம்பே கடலில் நீர் சறுக்கல் விளையாட்டுகளை ஜப்பான் அரசாங்கத்துடன் இணைந்து இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அண்மையில் ஜப்பானுக்கு மேற்கொண்ட விஜயத்தில் இந்த விடயம் தொடர்பில் ஆழமாக ஆராயப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.