ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பமாக இன்னும் நான்கு நாட்கள் மாத்திரமே உள்ள நிலையில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார காயம் காரணமாக தொடரில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னதாக இலங்கை அணியின் துஷ்மந்த சமீரவிற்கு லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஏற்பட்ட உபாதை காரணமாக ஆசியக் கிண்ணப் போட்டியில் பங்கேற்க்க மாட்டார் என தகவல் வெளியாகியது.
மேலும் இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரரான வனிந்து ஹசரங்க உபாதையின் பின் அவரது உடற்தகுதி முடிவுகளுக்காக காத்திருக்கும் நிலையில் ஆசியக் கிண்ண போட்டியின் முதல் சில ஆட்டங்களைத் தவறவிடக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நேற்றைய தினம், இலங்கை அணி வீரர்களான அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் குசல் ஜனித் பெரேராவுக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை அணியின் ஏனைய வீரர்களுக்கும் கொவிட்-19 தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
13போட்டிகள் கொண்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் எதிர்வரும் 30ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி இலங்கை அணியானது எதிர்வரும் 31ம் திகதி தனது முதலாவது போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.