இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டுநாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வரவிருந்த நிலையில், திடீரென அவரது பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை அறிவித்தது.
ராஜ்நாத் சிங் தமது விஜயத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புகளை நடத்தவிருந்ததுடன், திருகோணமலை மற்றும் நுவரெலியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவும் இருந்தார்.
இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மீளாய்வு செய்வதில் இந்த விஜயம் தீர்மானமிக்கதாக இருக்குமென இந்திய அரசாங்கம் அறிவித்திருந்த பின்புலத்திலேயே திடீரென அவரது பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தப் பயணம் ஒத்திவைக்கப்பட்டமைக்கான காரணத்தை இந்திய வெளிவிவகார அமைச்சு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்காத போதிலும் இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை குறித்து இலங்கை அதிகாரிகள் வழங்கிய தகவலின் பிரகாரமே இந்த விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் திருகோணமலை மற்றும் நுவரெலியாவுக்கு செல்லும் வகையில் சுற்றுப்பயண அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது.
என்றாலும், இலங்கையில் திடீரென மாறியுள்ள வானிலையால் நுவரெலியா மற்றும் திகோணமலைக்கு வான்வழியில் செல்வது கடினமாக இருக்குமென இலங்கை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளதை அடுத்தே இந்தப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீன கடல் ஆய்வுக்கப்பலான “ஷி யான் 6“ கப்பல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி இலங்கை வரவுள்ளதுடன், நவம்பர் 10ஆம் திகதிவரை குறித்த கப்பல் இலங்கைத் துறைமுகங்களில் தரித்து நிறுத்துவதற்கான சீனாவின் வேண்டுகோளுக்கு மத்தியிலேயே இந்திய பாதுகாப்பு அமைச்சரின் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது.
சீனக் கப்பல் தொடர்பாக இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா ஏற்கனவே பாதுகாப்புக் கவலைகளை வெளியிட்டிருந்ததுடன், சீனாவின் கோரிக்கைக்கு இலங்கை இன்னும் உத்தியோகபூர்வமாக அங்கீகாரம் வழங்கவும் இல்லை.
இந்தப் பின்புலத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அவதானிக்கப்பட்ட சூழலிலேயே பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.