பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவினால் உருவாக்கப்பட்டுவரும் புதிய கூட்டணியின் தலைமைத்துவ பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பாவுககு வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
அதன் பிரகாரம் ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரம் உள்ளிட்ட சகல பொறுப்புக்களையும் அனுர பிரியதர்ஷன யாப்பா எம்.பி.க்கு வழங்குவதற்கான யோசனையொன்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா ஆகியோரால் கூட்டணியின் உயர்பீடத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
புதிய கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.க்கள் குழு அண்மையில் பாராளுமன்ற வளாகத்தில் கூடிய போது இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், யோசனைக்கு ஏனைய உறுப்பினர்களால் அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல உறுப்பினர்களை இணைத்துக்கொள்ள இந்தக் குழு பலகட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாகவும், சகல தரப்பினரையும் இணைத்து பரந்தப்பட்ட கூட்டணியொன்றை அமைத்து அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான பணிகளை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இந்தக் கூட்டணி முன்னெடுக்க உள்ளதாகவும் அறிய முடிகிறது.