ஆசியக் கிண்ண தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் இலங்கை அணி இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியுடன் எதிர்வரும் 17 ஆம் திகதி இடம்பெறும் இறுதி போட்டிக்கு இலங்கை அணி தகுதிப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக இந்த போட்டி இடம்பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
மழை காரணமாக ஆட்டம் தாமதமாகவே ஆரம்பித்தது. இதனால் 42 ஓவர்களாக குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 42 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 252 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
மொகமட் ரிஸ்வான் ஆட்டமிழக்காது 86 ஓட்டங்களையும், அப்துல்லா ஷபீக் 52 ஓட்டங்களையும், இப்திகார் அகமது 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கடைசி 10 ஓவர்களில் பாகிஸ்தான் வீரர்கள் 102 ஓட்டங்களை குவித்திருந்தனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் மதீஷ பத்திரன மூன்று விக்கெட்டுகளையும், பிரமோத் மதுஷான் இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.
டக்வொர்த் லூயிஸ் கோட்பாட்டின் படி இலங்கை அணிக்கு 252 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பின்னர் வெற்றி இலக்கை துரத்த களம் இறங்கிய இலங்கை அணி 42 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.
குசல் மெண்டிஸ் 91 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 48 ஓட்டங்களையும் பெற்றனர்.
கடைசி நிமிடத்தில் இலங்கை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற சரித் அசலங்க 47 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
குசல் மெண்டிஸ் மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் இரண்டாவது விக்கெட்டுக்கு 100 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்தனர்.
பந்துவீச்சில் இப்திகார் அஹமட் 03 விக்கெட்டுக்களையும், ஷைன் ஷா அப்ரிடி இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக குசல் மெண்டிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, ஆசியக் கிண்ண தொடரில் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி 11வது முறையாக தகுதிபெற்றுள்ளது.