ஆஸி. உடனான தோல்வியால் இலங்கை அணி அரையிறுதி செல்வது கடினம்

0
81
Article Top Ad

இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டியில் நேற்றைய தினம் அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியினை பதிவுசெய்துள்ளது.

இலங்கை அணி நிர்ணயித்திருந்த 210 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போதும், மிச்சல் மார்ஷ் மற்றும் மார்னஸ் லபுசேங் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டங்களின் உதவியுடன் வெற்றியை பதிவுசெய்தது.

லக்னோவில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

இந்தப் போட்டியில் உபாதையால் பாதிக்கப்பட்டுள்ள தசுன் ஷானக மற்றும் மதீஷ பதிரண ஆகியோருக்கு பதிலாக சாமிக்க கருணாரத்ன மற்றும் லஹிரு குமார ஆகியோர் களமிறக்கப்பட்டிருந்தார்.

முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணிக்கு மிகவும் சிறந்த ஆரம்பத்தை குசல் பெரேரா மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஆகியோர் பெற்றுக்கொடுத்தனர்.

முதல் விக்கெட்டுக்காக சத இணைப்பாட்டத்தை இவர்கள் பகிர்ந்ததுடன், 125 ஓட்டங்களை இவர்கள் இருவரும் குவித்தனர். எனினும் 61 ஓட்டங்களை பெற்றிருந்த பெதும் நிஸ்ஸங்க, பெட் கம்மின்ஸின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அதனைத் தொடர்ந்து குசல் பெரேரா 78 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழந்தார்.

இவர்களிடமிருந்து சிறந்த ஆரம்பங்கள் கிடைத்த போதும், அதனைத்தொடர்ந்து களமிறங்கிய துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

ஒரு கட்டத்தில் இலங்கை அணி 157 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்திருந்த நிலையில், அடுத்த 9 விக்கெட்டுகளையும் வெறும் 52 ஓட்டங்களுக்கு பறிகொடுத்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் அடம் ஷாம்பா 4 விக்கெட்டுகளையும், மிச்சல் ஸ்டார்க் மற்றும் பெட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி வேகமான ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது. எனினும் அபாரமாக பந்துவீசிய டில்ஷான் மதுசங்க டேவிட் வோர்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் விஸக்கெட்டுகளை கைப்பற்றினார். முதல் 2 விக்கெட்டுகள் 24 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.

எவ்வாறாயினும் அனைத்தொடர்ந்து மிச்சல் மார்ஷ் அதிரடியாக ஓட்டங்களை குவிக்க, மறுமுனையில் மார்னஸ் லபுசேங் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் மிச்சல் மார்ஷ் 51 ஓட்டங்களை பெற்று ரன்-அவுட் மூலம் ஆட்டமிழந்தார்.

இதனைத்தொடர்ந்து ஜோஷ் இங்லிஷுடன் இணைந்த மார்னஸ் லபுசேங் அணியை வெற்றிப் பாதையை நோக்கி அழைத்துச் சென்றார்.

இருவரும் சிறப்பாக ஆட மார்னஸ் லபுசேங் 40 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார். இதனையடுத்து 58 ஓட்டங்களுடன் ஜொஷ் இங்லிஷ் ஆட்டமிழந்தார்.

எனினும் கிளேன் மெக்ஸ்வெல் 21 பந்துகளில் 31 ஓட்டங்களை பெற 35.2 ஓவர்கள் நிறைவில் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. பந்துவீச்சில் டில்ஷான் மதுசங்க 3 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தினார்.

முதல் மூன்று போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியை சந்தித்துள்ளதால் இன்றும் ஒரு போட்டியில் தோல்வியை தழுவினால் அரையிறுதி கனவு கனவாகவே முடிந்துவிடும். இங்கிலாந்து, இந்தியா என பலமான அணிகளை இலங்கை எதிர்கொள்ள வேண்டியுள்ளதால் அடுத்துவரும் போட்டிகள் இலங்கைக்கு சவால் மிக்கதாகவே இருக்கும்.