எங்கள் மீது போர் தொடுக்க நினைப்பது ஹிஸ்புல்லா செய்யும் பெரிய தவறு – எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்

0
67
Article Top Ad

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

நேற்றைய 16ஆவது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலுடன் போர் தொடுக்க முற்பட்டால் அதுதான் ஹிஸ்புல்லாவின் மிகப் பெரிய தவறாகும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் நேதன்யாகு கூறுகையில், தற்போது ஹிஸ்புல்லா அமைப்பு போரில் முழுமையாக ஈடுபடுமா என்பதை என்னால் கணிக்க முடியாது. ஹிஸ்புல்லா அவ்வாறு முடிவெடுத்தால், அது வருத்தப்படும். ஹிஸ்புல்லா அமைப்பை நினைத்துக்கூட பார்க்க முடியாத சக்தியுடன் நாங்கள் தாக்குவோம். அது ஹிஸ்புல்லா மற்றும் லெபனான் அரசு ஆகிய இரண்டிற்கும் அழிவை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த சில வாரங்களாக போர் நடைபெற்று வருகிறது. இருதரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த போரில், பொது மக்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், காசா எல்லை அருகில் இருக்கும் இஸ்ரேல் இராணுவ நிலைகளை குறிவைத்து ஹமாஸ் டிரோன் தாக்குதல் நடத்தியது. ஹமாஸ்-இன் ஆயுத பிரிவு அல் குவாசம் பிரிகேடிஸ் இந்த டிரோன் தாக்குதலை நடத்தி இருக்கிறது. இஸ்ரேலின் ஹிட்சிரம் நகரில் உள்ள விமானப்படைத்தளம், தஸ்லிம் நகரில் உள்ள இராணுவப்படை தளத்தை குறிவைத்தே ஹமாஸ் இந்த தாக்குதலை நடத்தியது.

அதன்படி ஹமாஸ் நடத்திய டிரோன் தாக்குதலை முறியடித்துவிட்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்து இருக்கிறது. காசாவில் இருந்து ஏவப்பட்ட இரண்டு டிரோன்களும் நிர் ஒஸ் மற்றும் என் ஹபிசர் பகுதியில் சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்து இருக்கிறது.

இஸ்ரேலுடனான தாக்குதலின்போது பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர் ஹமாஸ் பயங்கரவாதிகள். பிணைக் கைதிகளை விடுவித்தால் மட்டுமே போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், மேலும் 2 இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்துள்ளனர். அவர்கள் எகிப்து வழியாக மீட்கப்பட்டனர். மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்படுவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த 21-ம் திகதி 2 அமெரிக்க பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளது.