நான்கு தசாப்தங்களாக கிழக்கு மாகாணத்தில் இயங்கி வரும் உப பிரதேச செயலகத்தை முழு அதிகாரங்களுடன் கூடிய பிரதேச செயலகமாக மாற்றியமைத்து அந்த பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் இருந்து விடுவிக்க ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வடமாகாண தமிழ் மக்களின் பிரதிநிதி ஒருவர் நாடாளுமன்றத்தில் பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம், பிரதேச செயலகமான தரமுயர்த்தப்படாத காரணத்தினால், அப்பகுதியில் வாழும் தமிழர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த வார இறுதியில் (நவம்பர் 28) நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
“தமிழ் மக்களுக்குத் தேவையான நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. தமிழ் மக்கள் பாரிய பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர்.”
அம்பாறை மாவட்டத்தில் 1986ஆம் ஆண்டு கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் ஸ்தாபிக்கப்பட்டதுடன், 1993ஆம் ஆண்டு அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைய, அதனை பிரதேச செயலகமாக மாற்றத் தீர்மானிக்கப்பட்டதாக பிரதேச ஊடகவியலாளர் தெரிவிக்கின்றனர்.
தமது நிர்வாகத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு முஸ்லிம்கள் அதிகம் வாழும் பிரதேசத்தில் அமைந்துள்ள கல்முனை தெற்கு பிரதேச செயலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளதாக கல்முனை வடக்கு பிரதேசத்தில் வாழும் தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் நிதி, காணி அதிகாரங்களை இழந்து தமிழ் பிரதேசங்களுக்கு அபிவிருத்தி நடவடிக்கைகளில் நிதியை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கும் நிலைமையை எதிர்கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கணக்காளர்கள் உள்ளிட்ட முக்கிய நியமனங்களை வழங்கி கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழுமையான பிரதேச செயலகமாக மாற்றுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் மேலும் கோரிக்கை விடுத்தார்.
தமிழர்கள் பாரம்பரியமாக வாழும் பிரதேசத்தில் பிரதேச செயலகத்தை அங்கீகரிக்க ஏன் முடியாது என? பிரதமர் தலைமையிலான உள்ளூராட்சி அமைச்சுக்களிடம் தமிழ் மக்களின் பிரதிநிதி கேள்வி எழுப்பினார்.
“வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் வாழும் ஏனைய பிரதேசங்களில் முஸ்லிம் பிரிவுகள், சிங்களப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத குடியேற்றங்கள் நடந்திருந்தும்கூட அந்த சட்டவிரோதமான செயலை சட்டபூர்வமாக்குகின்ற வகையில் அந்தப் பிரிவுகளை உருவாக்க முடியுமானால், இயல்பாகவே – பூர்வீகமாக வாழ்ந்துவந்த தமிழ் மக்களுடைய பிரதேச செயலகர் பிரிவை அங்கீகரிக்க ஏன் உங்களால் முடியாதுள்ளது? என்ற கேள்வியை பிரதமர் அவர்களுடைய பொதுநிர்வாக அமைச்சுக்களிடம் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.”
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் கீழ் 29 கிராம சேவகர் பிரிவுகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.