மட்டக்களப்பு, மயிலத்தமடு – மாதவனைப் பகுதிக்குச் சென்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரை சிங்களக் குடியேற்றவாசிகள் தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கடும் சொற்பிரயோகங்களுடன் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கால்நடை மேய்ச்சல் தரையான மயிலத்தமடு – மாதவனைப் பகுதியில் மகாவலி அதிகார சபையால் சட்டவிரோத சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டவிரோத குடியேற்றவாசிகளை அப்புறப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், நீதிமன்றமும் கட்டளையிட்டும், சட்டவிரோத குடியேற்றவாசிகள் அங்கிருந்து நகரவில்லை.
குறிப்பிட்ட பகுதிக்கு மாடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வதில் உள்ள சவால்களைச் சுட்டிக்காட்டி, பண்ணையாளர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தலும் ஈடுபட்டுள்ளனர்.
மேய்ச்சல் தரை உரிமைக்காகக் குரல் கொடுப்பவர்களின் மாடுகளை இலக்கு வைத்து சுட்டுக் கொல்லப்படும் சம்பவங்களும் பதிவாகி வருகின்றன.
இந்தப் பின்னணியில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் மயிலத்தமடு – மாதவனைப் பகுதிக்குச் சென்றுள்ளனர்.
அவர்களின் பயணம் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த போதும், முன்கூட்டியே தகவலறிந்த சிங்கள சட்டவிரோத குடியேற்றவாசிகள் வளமண்டி பாலத்தில் வீதித் தடைகளை ஏற்படுத்தி, பாலத்தை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது அம்பிட்டிய சுமண ரத்ன தேரர், அங்கு வந்து கடும்போக்கில் நடந்து கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடகங்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, கத்திக் கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டார்.
இதையடுத்து, கஜேந்திரகுமார் தரப்பினர் மேற்கொண்டு நகராமல் பொலிஸார் தடையேற்படுத்தியிருந்தனர்.
இந்தப் பயணத்துக்கு முன்னதாக, மயிலத்தமடுவுக்குச் செல்வதற்குக் கரடியனாறு பொலிஸாரிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நேற்று அனுமதி கோரியிருந்தனர். அதற்கு, கரடியனாறு பொலிஸார் மறுப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றே, ஜனாதிபதி செயலாளரைத் தொடர்பு கொண்டு விடயத்தைத் தெரிவித்தார். இந்த நாட்டில் யாரும் எங்கும் செல்வதற்கு அனுமதியுண்டு என்றும், நீங்கள் மயிலத்தமடு செல்லலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, பொலிஸ் உயர்மட்டத்திலிருந்தும் இதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
எனினும், இன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்பினர் மயிலத்தமடு சென்ற போது, பொலிஸாரால் வழிமறிக்கப்பட்டார். ஜனாதிபதி கடந்த ஒக்டோபரில் எடுத்த தீர்மானத்தின்படி யாரும் அங்கு செல்ல முடியாது என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதையடுத்து, கஜேந்திரகுமார் ஜனாதிபதி செயலாளரைத் தொடர்பு கொண்டு விடயத்தைத் தெரிவித்தார். யாரும் உங்களை மறிக்க முடியாது எனத் தெரிவித்த ஜனாதிபதி செயலாளர், உரிய தரப்பினரைத் தொடர்பு கொண்டு விட்டு, மீள அழைப்பதாக தெரிவித்திருந்தார். எனினும், அவர் மீண்டும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு அழைப்பேற்படுத்தவில்லை. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பலமுறை அழைத்த போதும், பதிலளிக்கவில்லை.
சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் வரை அங்க காத்திருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்பினர், மீண்டும் திரும்பி வந்தனர்.