“மீளவும் ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதியாக வர வேண்டும். நெருக்கடியான நேரத்தில் இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாத்தவர் ரணில் விக்கிரமசிங்கவே. ஆகையால் மீண்டும் அவரே ஜனாதிபதியாக வர வேண்டும். அவருக்கு ஆதரவை வழங்கி வெற்றி பெறச் செய்வதனூடாகத் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காணலாம்.”
– இவ்வாறு ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதித் தேர்தலோ அல்லது வேறு எந்தத் தேர்தல் என்றாலும் நடைபெறுகின்றபோது சுயலாபம் இல்லாமல் மக்கள் நலன் சார்ந்து பேரம் பேசல்களின் அடிப்படையில்தான் எமது முடிவுகளும் எடுக்கப்படும்.
ஆகவே, ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகின்றபோது ஏனைய தமிழ்க் கட்சிகளும் பேரம் பேசல்களின் அடிப்படையில் தமது தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
இவ்வாறான நிலைமையில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குப் புதிய தலைவர் தெரிவில் சுமந்திரன் வந்தால் என்ன, சிறிதரன் வந்தால் என்ன என்பதில் பிரச்சினை இல்லை. ஆனால், எதிர்ப்பு அரசியலைக் கைவிட்டு இணக்க அரசியலின் அடிப்படையில் பேச்சு ஊடாகத்தான் எதையும் செய்ய முடியும்.
இன்றைய நிலைமையில் மீளவும் ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதியாக வர வேண்டும். ஏனெனில் நாடு பொருளாதாரப் பாதிப்பில் சிக்கியிருந்தபோது – பதவியை எடுக்கப் பலரும் மறுதலித்தபோது துணிச்சலாக வந்து பதவியை எடுத்தவர் ரணில் விக்கிரமசிங்கவே.
நெருக்கடியான நேரத்தில் இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாத்தவர் ரணில் விக்கிரமசிங்க. ஆகையால் மீண்டும் அவரே ஜனாதிபதியாக வர வேண்டும். அவருக்கு ஆதரவை வழங்கி வெற்றி பெறச் செய்வதனூடாகத் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காணலாம்.” – என்றார்.