தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் (Srettha Thavisin ), எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் பலச் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால் பிப்ரவரி மாதம் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) கையெழுத்திடுவதற்காக ஸ்ரேத்தா தவிசின், இலங்கை வரவுள்ளதாக தாய்லாந்து வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
வர்த்தக அமைச்சின் வர்த்தக பேச்சுவார்த்தைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சோதிமா இம்சவாஸ்திகுல் நேற்று ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது, ”தாய்லாந்துடனான ஒன்பதாவது சுற்று FTA பேச்சுவார்த்தையை இலங்கை கடந்த18 முதல் 20ஆம் திகதிவரை நடத்தியது.
கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் இலங்கையின் அரசாங்க முகவர் நிலையங்களின் தொடர்ச்சியான மறுசீரமைப்பு காரணமாக நான்கு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு நாடுகளுக்கு இடையிலான FTA பேச்சுவார்த்தைகள் நவம்பரில் மீண்டும் தொடங்கப்பட்டன.
அண்மைய சுற்று பேச்சுவார்த்தையில் வர்த்தகம், சேவைகள், முதலீடுகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில், எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பிரதமர் இலங்கை செல்வதற்கு முன்னர், வர்த்தக அமைச்சு முடிவுகளை அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கும்.” என்றும் சோதிமா இம்சவாஸ்திகுல் கூறினார்.
இலங்கை 22 மில்லியன் மக்களைக் கொண்ட சிறிய நாடாக இருந்தாலும், இந்தியப் பெருங்கடலில் கடல்சார் பொருளாதாரத்தில் இலங்கை கணிசமான பங்கை வகிக்கிறது. ரத்தினக் கற்கள், கிராஃபைட் மற்றும் நீர்வாழ் விலங்குகள் போன்ற ஏராளமான இயற்கை வளங்களை இலங்கை கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஒக்டோபர் வரை, தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இருவழி வர்த்தகத்தின் மதிப்பு 320.37 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 10.9 பில்லியன் பாட்) ஆகும்.
தாய்லாந்து 213.49 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்ததுடன், இலங்கையில் இருந்து 106.88 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. இதனால் இருநாட்டுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள இலங்கை தீவிரம் காட்டி வருகிறது.