“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வடக்கு மாகாண மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு வடக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வியாழக்கிழமை முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை வடக்கு மாகாணத்துக்கு நான்கு நாள் விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்த விஜயம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வாக்கு அரசியலுக்காகவே ஜனாதிபதி வடக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்துள்ளார். அவரின் வருகையை வடக்கு மக்கள் விரும்பவில்லை. அவர்கள் வீதிகளில் நின்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகப் போராடுகின்றார்கள். ரணிலை வடக்கு மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு வடக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
வடக்கு மக்கள் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியையே ஆதரிப்பார்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு அதிகப்படியான வாக்குகளை வடக்கு மக்கள் அளித்தார்கள். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் அதைவிடப் பெருமளவிலான வாக்குகளை சஜித் பிரேமதாஸவுக்கு வடக்கு மக்கள் வழங்குவார்கள். இம்முறை சஜித் பிரேமதாஸவின் வெற்றியில் வடக்கு மக்களின் பங்கு முக்கிய இடம் வகிக்கும்.” – என்றார்.
……….