தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் யார்?

0
70
Article Top Ad

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரைப் போட்டியின்றி தெரிவு செய்வதற்காக மூன்று வேட்பாளர்களும் தமக்குள் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எடுக்க ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஏற்கனவே திட்டமிட்டபடி தமிழரசுக் கட்சியின் பொதுக் குழுக்கூட்டத்தை எதிர்வரும் 21ஆம் திகதியும், தேசிய மாநாட்டை 28 ஆம் திகதியும் நடத்தவும் கட்சியின் நேற்றைய அரசியல் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் பதவிக்கு மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோரின் பெயர்களே இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம், அக்கட்சியின் பெருந்தலைவரான இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நேற்று நடைபெற்றது.

சம்பந்தனின் வேண்டுகோளுக்கமைய திருகோணமலை மாவட்டத்தில் கட்சியின் நிர்வாகத் தெரிவுகளில் நடந்த குளறுபடி களைச் சீர்செய்யாமல் தேசிய மாநாட்டை நடத்தக்கூடாது எனக் கட்சியின் தற்போதைய தலைவரான மாவை சேனாதிராஜா வலியுறுத்திய போதும், கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் மாநாட்டை நடத்தியே தீர வேண்டும் என்று வலியுறுத்தியதால், பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தின் அடிப்படையில், மாநாட்டை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

நேற்றுப் பிற்பகல் 3 மணிக்குக் கூட்டம் ஆரம்பமானது. இதன்போது கூட்டத்தின் நோக்கம் தொடர்பில் மாவை சேனாதிராஜா விளக்கமளித்தார். இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்குச் சிறிய துண்டுப்பிரசுரமொன்றை வழங்கினார்.

அதில், 1951 முதல் 2019 வரையான தேசிய மாநாட்டு விபரங்கள், அதில் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரங்கள் இருந்தன. கிரமமான கால ஒழுங்கில் தேசிய மாநாடுகள் நடந்து போட்டியின்றி தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டதை அதில் தவராசா குறிப்பிட்டிருந்தார்.

சிறிதரன் – சுமந்திரன் ஆகிய இருவருமே தலைமைப் போட்டியில் யார் வென்றாலும், இணைந்து செயற்படுவதாகக் கூறியுள்ளனர். ஆனால், கீழ் மட்டத்தில் அவ்வாறு நிலைமையில்லை. இரண்டு தரப்பு ஆதரவாளர்களும் சமூக வலைத்தளங்களில் மோதிக் கொண்டிருக்கின்றார்கள்.

யார் வென்றாலும், கட்சிக்குப் பாதிப்பு உள்ளது என்று தவராசா குறிப்பிட்டார். இதனால், மூன்று வேட்பாளர்களும் தமக்குள் பேசி ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் தலா 2 வருடங்கள் எனப் பேசித் தீர்க்கலாம் என்று தவராசா பிரேரித்தார்.

சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பியும் இதனை ஆமோதித்தார். தலைமைப் போட்டியால் வட்டாரக் கிளைகளுக்குள் குழப்பம் நிலவுகின்றது என்று அவர் தெரிவித்தார். கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பான்மையானவர்கள் இதே கருத்தையே தெரிவித்தனர்.

இதையடுத்து, தலைமைப் பதவி போட்டியில் விட்டுக்கொடுப்புக்கள் மேற்கொள்ளலாமா என 3 வேட்பாளர்களும் கலந்துரையாடி பதிலளிப்பதாக 3 வேட்பாளர்கள் தரப்பிலும் கூறப்பட்டது. இதற்காக ஒரு நாள் அவகாசத்தை அவர்கள் கோரினர். இன்று கொழும்பில் 3 பேரும் கலந்துரையாடி தமது முடிவை அறிவிப்பார்கள்.

இதைத் தொடர்ந்து கட்சியின் தேசிய மாநாட்டு விபரம் பேசப்பட்டது. சம்பந்தனின் வேண்டுகோளுக்கமைய திருகோணமலை கிளைகளை மீள் தெரிவு செய்யாமல் தேசிய மாநாட்டை நடத்தக்கூடாது என மாவை சேனாதிராஜா கூறினார். ஒன்றரை வருடங்களின் முன்னர் நடந்த விவகாரத்தை இப்போது பேசுகிறீர்கள், இதற்காக மாநாட்டை தள்ளிவைக்கக் கூடாது என எம்.ஏ.சுமந்திரன் எம்.பி இதன்போது தெரிவித்தார்.

மாநாட்டைத் தள்ளிவைத்தால் கட்சியின் உறுப்புரிமைக்குச் சிக்கல் ஏற்படும் என்பது போன்ற காரணங்களைப் பலரும் முன்வைத்தனர். சம்பந்தனின் கவலைகளை தீர்க்க, அவர் சிபாரிசு செய்யும் 6 பேரை திருகோணமலை சார்பில் பொதுக் குழுவில் கலந்துகொள்ள அனுமதிக்க லாம் என்று மாற்று யோசனை சொல்லப்பட்டது. பெரும்பாலானவர்கள் இதை ஆதரித்ததால், திட்டமிட்டபடி தேசிய மாநாட்டை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. கூறியதாவது:

‘தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் கட்சி மாநாடு சம்பந்தமாகப் பல விடயங்கள் அலசி ஆராயப்பட்டன. தலைவர் பதவிக்கு மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. போட்டி இல்லாமல் இணக்கப்பாட்டின் அடிப்படையில் தலைவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற கருத்து கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. தவிர்க்க முடியாத காரணத்தால் போட்டி இடம்பெற்றால் தேர்வு எவ்வாறு இடம்பெற வேண்டும் என்பது குறித்து கட்சி யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“நாங்கள் மூவரும் ஒரு நாள் அவகாசம் கோரினோம். மூவரும் தனியே சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளோம். அதன்பின்னர் கட்சித் தலைவருக்கும், செயலாளருக்கும் முடிவு அறிவிக்கப்படும். இணக்கப்பாட்டுடனோ அல்லது கட்சி யாப்பின் பிரகாரமோ புதிய தலைவர் தேர்வு எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறும். அதனைத் தொடர்ந்து கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 28ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறும்” என்றார்.