புலம்பெயர் தமிழ் சமூகம் கனடாவை மிகவும் மாறுபட்ட மற்றும் வளமான நாடாக மாற்ற உதவியுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், “கனடா அரசின் சார்பாக, தைப்பொங்கல் கொண்டாடும் அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும்” அவர் கூறியுள்ளார்.
தைப்பொங்கலை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே கனடா பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
“உலகின் மிகப் பெரிய தமிழ் புலம்பெயர் சமூகத்தைக் கொண்டுள்ள நாடு கனடா, தமிழ் சமூகத்தின் தொடர்ச்சியான பங்களிப்பு கனடாவை மிகவும் மாறுபட்ட மற்றும் வளமானதாக மாற்ற உதவுகின்றன.
கனடா, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் தமிழ் பாரம்பரிய மாதத்தை கொண்டாடுகிறது, இது தமிழ் கனடியர்களின் துடிப்பான வரலாறு மற்றும் வலிமையைப் பற்றி சிந்திக்க நம் அனைவருக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
இந்த தைப்பொங்கலானது, குடும்பங்களும் நண்பர்களும் கூடி அபரிமிதமான விளைச்சலுக்கு நன்றி தெரிவிக்கவும், எதிர்காலத்தை நம்பிக்கையுடன் பார்க்கவும், மகிழ்ச்சி மற்றும் அமைதிக்கான நேரமாகும்.
இந்த பாரம்பரிய அரிசி உணவு மற்றும் பால் வரவிருக்கும் ஆண்டிற்கான நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் குறிக்கிறது” எனவும் “இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.