தென் அமெரிக்காவில் பெரும் பகுதியை கொண்ட நாடுதான் கொலம்பியா (Colombia). அமெரிக்காவில் இருந்து கொலம்பியாவிற்கு பலர் சுற்று பயணம் செய்து வருகின்றனர்.
கடந்த 2022 செப்டம்பர் மாதம், பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை உலகின் அழகான நாடுகளின் பட்டியலில் இந்நாட்டை முன்னணியில் வைத்தது.
ஆனால், கடந்த சில மாதங்களாக அந்நாட்டிற்கு செல்லும் அமெரிக்கர்கள் மற்றும் மேற்கத்திய நாட்டினருக்கு ஆபத்தாக உள்ளது.
அமெரிக்க மின்னசோட்டா மாநிலத்தை சேர்ந்த டவ் கெர் (50), மெடலின் நகருக்கு 2-மாத சுற்று பயணம் சென்றார்.
தனது குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்த டவ் கெர், திடீரென காணாமல் போனார். அவரை கொலம்பியா காவல்துறை தேடி வந்த நிலையில், கொல்லப்பட்ட அவரது உடல் ஒரு காட்டு பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
சுமார் 2000 டொலர் பணத்திற்காக அவர் கொல்லப்பட்டது விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.
டேட்டிங் செயலி ஒன்றில் அறிமுகமான பெண் ஒருவருடன் சென்ற போது அவரை அப்பெண்ணும் அவரது நண்பரும் பணத்திற்காக கொன்றதாக தெரிய வந்துள்ளது.
இதே போல் ஜெஃப் ஹுவெட் என்பவர் ஓட்டல் அறையில் கொல்லப்பட்டு கிடந்தார்.
கடந்த 2023 அக்டோபர் வரை 32 வெளிநாட்டினர் கொல்லப்பட்டதாகவும், அதில் 12 அமெரிக்கர்கள், 3 இங்கிலாந்து நாட்டவர்கள் என்றும் கொலம்பியா அரசு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை 2022-ஐ விட 40 சதவீதம் அதிகம்.
சுற்றுலா பயணிகளுடன் நட்பாக பேசி, அவர்கள் அருந்தும் பானங்களில் “ஸ்கொபோலமைன்” (scopolamaine) எனும் நிறமற்ற போதை மருந்தை கலந்து கொடுத்து, அவர்களை கடத்தி சென்று, உடைமைகளை திருடி, கொலையும் செய்கின்ற கும்பல் அதிகரித்து வருவதாக அங்குள்ள அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.
அறிமுகம் இல்லாத நபர்களுடன் உரையாடும் போது எச்சரிக்கையாக இருக்கவும், எங்கு சென்றாலும் சொந்த நாட்டில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பில் இருக்குமாறும், கொள்ளை முயற்சியில் சிக்கி கொள்ள நேரிட்டல் எதிர்க்காமல் இருக்குமாறும், தனது நாட்டிலிருந்து அங்கு சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.