இளையராஜாவின் மகள் பவதாரிணி இலங்கையில் காலமானார்: இன்று சடலம் தமிழகம் கொண்டு செல்லப்படுகிறது

0
65
Article Top Ad

சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜாவின் மகள் பவதாரணி காலமாகியுள்ளார்.

கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர் நேற்று மாலை ஐந்து மணியளவில் கொழும்பில் காலமானார்.

அவரது உடல் இன்று சென்னைக்கு கொண்டுச் செல்லப்படவுள்ளது.

47 வயதான பவதாரிணி இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

‘பாரதி’ படத்தின் ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ என்ற தமிழ் பாடலுக்காக சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.

கொழும்பில் எதிர்வரும் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள இசைநிகழ்ச்சியில் கலந்துகொள்ள இளையராஜா நேற்றுமுன்தினம் இலங்கை வந்திருந்தார்.

இந்நிலையிலேயே, பவதாரிணி உயிரிழந்துள்ளத தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆறு மாதங்களாக கல்லீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சமீபத்தில், மேல் சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது இறுதிச் சடங்கு பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

‘இராசையா’ படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானவர் பவதாரிணி. அப்போதிருந்து, அவர் தனது தந்தை இளையராஜா மற்றும் சகோதரர்களான கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோருக்காக பல பாடல்களைப் பாடினார்.

அவர் இசையமைப்பாளர்களான தேவா மற்றும் சிற்பி ஆகியோருக்காகவும் பாடல்களை பாடியுள்ளார்.

2002ஆம் ஆண்டு, ரேவதி இயக்கிய ‘மித்ர் மை ஃப்ரெண்ட்’ படம் மூலம் இசையமைப்பாளராக மாறினார்.

பின்னர் ‘ஃபிர் மிலேங்கே’ உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இறுதியான மலையாளப் படமான ‘மாயநதி’ என்ற படத்திற்கு இசைய அமைத்திருந்தார்.

மேலும்,’காதலுக்கு மரியாதை’, ‘பாரதி’, ‘அழகி’, ‘நண்பர்கள்’, ‘பா’, ‘மங்காத்தா’ மற்றும் ‘அநேகன்’ போன்ற தமிழ்த் திரைப்படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார்.