‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்: 2026 சட்டப்பேரவை தேர்தல்தான் இலக்கு என அறிவிப்பு

0
66
Article Top Ad

‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் நடிகர் விஜய், புதிய கட்சி தொடங்கியுள்ளார்.

நெருங்கி வரும் 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. இத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்துள்ள விஜய், 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதுதான் இலக்கு என்று அறிவித்துள்ளார்.

விஜய் மக்கள் இயக்கம் சமீபகாலமாக அரசியல் நிகழ்வுகளில் அதிக ஆர்வம் காட்டி வந்தது. நடிகர் விஜய்யும் பல்வேறு அணி நிர்வாகிகளுடன் அவ்வப்போது ஆலோசனையில் ஈடுபட்டு, இயக்கம் சார்பில் பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வந்தார்.

இதன் தொடர்ச்சியாக, கடந்த 25-ம் திகதி சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் மாநில பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்டி, மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில், விஜய் புதிய கட்சி தொடங்க இருப்பதாகவும், கட்சித் தலைவராக அவரே செயல்படுவார் என்றும் தகவல் வெளியானது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தில் கட்சியின் பெயரை விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று பதிவு செய்தார். அதன்படி, தேர்தல் ஆணையத்தில் விஜய்யின் கட்சி பெயர் ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கட்சியின் தலைவர் என்ற முறையில்,நடிகர் விஜய் தனது முதல் அறிக்கையை நேற்று வெளியிட்டார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

தற்போதைய அரசியல் சூழலில் நிர்வாக சீர்கேடுகள், ஊழல் மலிந்த கலாச்சாரம் ஒருபுறம்என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் பிளவுவாத அரசியல் கலாச்சாரம் மறுபுறம். இவ்வாறு இருபுறமும் நமது ஒற்றுமை, முன்னேற்றத்துக்கான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன.

என்னால் முடிந்த வரை, தமிழக மக்களுக்கு இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பது எனது நீண்டகால எண்ணம். ‘எண்ணித் துணிக கருமம்’ என்பது வள்ளுவர் வாக்கு. அதன்படியே, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் எனது தலைமையில் அரசியல் கட்சி தொடங்கப்பட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்துக்கு வழிவகுப்பதுதான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்த பிறகு, வரும் மக்களவை தேர்தல்முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான, எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நமது அரசியல் பயணம் தொடங்கும்.

இடைப்பட்ட காலத்தில், கட்சி தொண்டர்களை அரசியல்மயப்படுத்தி, அமைப்பு ரீதியாக அவர்களை தயார் நிலைக்கு கொண்டுவரும் பணிகளும், கட்சியின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஜனநாயக முறையில் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து, உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்படும்.

கடந்த 25-ம் திகதி நடந்த பொதுக்குழுவில் கட்சியின் தலைவர், தலைமை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, கட்சியின் அடிப்படை சட்ட விதிகளுக்கு முறைப்படி ஒப்புதல்வழங்கப்பட்டு பொதுக்குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.