தென்னிலங்கை அரசியலும் மேட்டுக்குடி அரசியல்வாதிகளும்

0
49
Article Top Ad

இலங்கை அரசியல் வரலாற்றில் ஜே.ஆர்.ஜெயவர்தன மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்க இடையில் இருந்த அரசியல் பகையை போன்ற பகை வேறு எந்த தலைவர்களிடமும் இருக்கவில்லை.

1970-1977 ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணியின் ஆட்சிக்காலத்தில் அன்றைய பிரதமரான சிறிமாவோ,1971 ஆம் ஆண்டு ஜே.வி.பியின் புரட்சியின் போது, எவ்வித குற்றச்சாட்டுக்களும் இல்லாத நிலையில், ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஒரே புதல்வரான ரவி ஜெயவர்தனவை கைது செய்தார்.

அதேபோல் ஜெயவர்தனவும் அவரது பாரியாரும் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல விமானத்தில் ஏறியிருந்த போது, அந்நிய செலாவணி குற்றச்சாட்டில் ஜே.ஆரை கைது செய்ய முயற்சித்தார்.

எதிர்க்கட்சி தலைவரான தனக்கு சிறிமாவோ பண்டாரநாயக்க செய்த கொடுமைகளை ஜே.ஆர் மறக்கவில்லை.

அவர் ஜனாதிபதியாக பதவிக்கு வந்த பின்னர் காணி குற்றச்சாட்டு ஒன்றின் கீழ் சிறிமாவோவின் குடியுரிமையை பறித்தார்.

இவர்கள் இருவரும் மேட்டுக்குடி பிரபு அரசியல் வகுப்பின் தலைவர்கள். சிறிமாவோ மேட்டுக்குடி பிரபுக்கள் பரம்பரையை சேர்ந்தவர். ஜே.ஆர். கொழும்பு கறுவாத்தோட்டத்தை சேர்ந்த பிரபுக்கள் பரம்பரை.

இந்த நிலையில், 1988 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பிரபுக்கள் அல்லாத பரம்பரையை சேர்ந்த ரணசிங்க பிரேமதாச வெற்றி பெறுவார் என தெரிய ஆரம்பித்ததும் இவர்கள் இருவருக்கும் இடையில் இருந்து வந்த பகை நீங்கியது.

ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் இடைக்கால அரசாங்கத்தை உருவாக்க முயற்சித்த ஜே.ஆர்.

1988 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் ஜே.ஆர் மற்றும் அனுர பண்டாரநாயக்க ஆகியோர் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை ஆரம்பித்தனர்.

சிறிமாவோவின் பொதுக்கூட்டங்களுக்கு ஜே.வி.பியினரின் அச்சுறுத்தல் ஏற்பட்டதன் காரணமாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இந்த பேச்சுவார்த்தைக்கு இணங்கியது.

ஜே.வி.பியின் வன்செயல்கள் காரணமாக ஐக்கிய தேசியக்கட்சி கட்சியின் வாக்கு வங்கிக்கு ஏற்படும் சேதத்தை விட சுதந்திரக்கட்சியின் வாக்கு வங்கிக்கு ஏற்படும் சேதம் மிக மோசமானது என்பதை அந்த கட்சி புரிந்துக்கொண்டது.

ரணசிங்க பிரேமதாசவுக்கு பிரசாரக் கூட்டம் ஒன்றை நடத்தக்கூட முடியாத அளவுக்கு ஜே.வி.பியினரின் வன்செயல்கள் இருந்த போதிலும் ஜே.வி.பியினரால் மலையக தமிழர்கள் மற்றும் கிழக்கு முஸ்லிம் மக்களின் வாக்கு வங்கிக்குள் வன்செயல்களை பரப்ப முடியாமல் போனது.

அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்து இடைக்கால அரசாங்கத்தை அமைத்து ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலையை உருவாக்குவது ஜே.ஆர். மற்றும் அனுர பண்டாரநாயக்க ஆகியோரின் பேச்சுவார்த்தையின் நோக்கமாக இருந்தது.

எனினும் கீழ் வகுப்பை சேர்ந்தவரான ரணசிங்க பிரேமதாச நாட்டின் ஜனாதிபதியாக வருவதை தடுக்க வேண்டும் என்பதே இவர்களின் உண்மையான நோக்கமாக இருந்தது.

இந்த பேச்சுவார்ததை பற்றி கேள்விப்பட்டு கடும் ஆத்திரம் கொண்ட ரணசிங்க பிரேமதாச, பொரளையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின்னர், கொழும்பு வோட் பிளேசில் அமைந்துள்ள ஜே.ஆரின் வீட்டுக்குச் சென்று போட்டியில் இருந்து தான் விலக போவதாக அச்சுறுத்தினார்.

கீழ் வகுப்பினர் ஆட்சிக்கு வருவதை விரும்பாத மேட்டுக்குடி அரசியல்வாதிகள்
அந்த நேரத்தில் ஐக்கிய தேசியக்கட்சியினரின் மத்தியில் அமோக ஆதரவு பிரேமதாசவுக்கே இருந்தது. இதனையடுத்து ஜே.ஆர். சுதந்திரக்கட்சியுடனான தனது பேச்சுவார்த்தை இடையில் நிறுத்தினார்.

அந்த நேரத்தில் ஜே.ஆர். மற்றும் பண்டாரநாயக்கவினருக்கு இரண்டு இலக்குகள் இருந்தன. பிரேமதாச நாட்டின் ஜனாதிபதியாக பதவிக்கு வருவதை தடுப்பது முதல் இலக்கு.ஜே.வி.பியை அடக்க சர்வக்கட்சிகளின் இணக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது இரண்டாவது இலக்கு.

ரணசிங்க பிரேமதாசவை போல், ஜே.வி.பியின் தலைவரான ரோஹன விஜேவீரவும் அடித்தட்டு வகுப்பை சேர்ந்தவர்.

பிரேமதாச வெற்றி பெறுவது மற்றும் விஜேவீர நாட்டை கைப்பற்றுவது என்பவற்றை இலங்கையின் பிரபு அரசியல் வகுப்பினரால் ஜீரணிக்க முடியவில்லை.

1988 ஆம் ஆண்டுக்கு பின் சரியாக 36 வருடங்களுக்கு பிறகு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மேட்டுக்குடியினர் அல்லாத வகுப்பை சேர்நத இரண்டு தலைவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகி வருகின்றனர்.

அவர்களில் ஒருவர் ரணசிங்க பிரேமதாசவின் புதல்வர் சஜித் பிரேமதாச மற்றையவர் தம்புத்தேகமவில் கிராம பாடசாலையில் கல்வி கற்ற ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க. இவர்களில் எவரேனும் ஒருவர் ஜனாதிபதியாக பதவிக்கு வருவதை மேட்டுக்குடி அரசியல் பிரபுக்கள் விரும்பவில்லை.

இவர்கள் பதவி வருவதை தடுப்பதற்காகவே ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது தொடர்பான யோசனையை கொண்டு வருகின்றனர். இது மேட்டுக்குடி பிரபுக்கள் பரம்பரையினரின் அதிசயமான மனநிலை.

1988 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வரும் நேரத்தில் தேர்தல் ஆணையாளரின் அலுவலகத்திற்கு சென்ற சிறிமாவோ, தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுவதை நிறுத்துமாறு கூறி, நாற்காலி ஒன்றை காலால் எட்டி உதைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

பிரேமதாசவிடம் தான் தோல்வியடைவதை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில் சிறிமாவோ இருந்ததாக ஜே.ஆர். தனது சுயசரிதையில் கூறியுள்ளார்.

ரணசிங்க பிரேமதாச வெற்றி பெற்று ஜே.வி.பிக்கு மூன்று அமைச்சு பொறுப்புகளை வழங்கி கூட்டு அரசாங்கத்தை அமைக்க அழைப்பு விடுத்த போது, மேட்டுக்குடி பிரபுக்கள் மீண்டும் செயற்பட ஆரம்பித்தனர்.

பிரேமதாச அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களாக விளங்கிய ஜே.ஆர். நியமித்த ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளரான பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன மற்றும் ஜே.ஆரின் மருமகனான அன்றைய சபை முதல்வர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்து, ஜே.வி.பியை அடக்கும் இடத்தை நோக்கி பிரேமதாசவை தள்ளினர்.

அப்போது சர்வக்கட்சி மாநாட்டில் கலந்துக்கொண்ட சிறிமாவோ பண்டாரநாயக்க, ஜே.வி.பியினர் அடக்கப்படுவதை நியாயப்படுத்தினார்.

1983 ஆம் ஆண்டின் பின்னர் தென் இலங்கையின் அரசியல் வரலாற்றில் மேட்டுக்குடி வகுப்பினர் அல்லாத வகுப்பை சேர்ந்த மூன்று அரசியல் தலைவர்கள் உருவாகினர்.

ரணசிங்க பிரேமதாச, ரோஹன விஜேவீர மற்றும் விஜய குமாரதுங்க ஆகியோரே அந்த மூன்று தலைவர்களாவர். இவர்கள் மூவரும் மேட்டுக்குடி பிரபு அரசியல் வகுப்பினருக்கு பெரும் தலைவலியாக மாறினர். அவர்கள், இந்த தலைவர்களுக்கு எதிராக தந்திரமாக காய்களை நகர்த்தினர். இதனால், மேட்டுக்குடி அல்லாத வகுப்பை சேர்ந்த மூன்று தலைவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ள ஆரம்பித்தனர்.

ஜே.ஆர் ஜெயவர்தன, விஜய குமாரதுங்கவை கைது செய்தார். விஜேவீரவின் ஜே.வி.பியை தடை செய்து அவரை காட்டுக்குள் முடக்கினார்.

சிறிமாவோ பண்டாரநாயக்கவும் அனுர பண்டாரநாயக்கவும் பிரேமதாசவை அதிகமாக விமர்சித்தனர். அத்துடன் அவர்கள் விஜய குமாரதுங்கவை சுதந்திரக்கட்சியில் இருந்து நீக்கினர்.

1971 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க, விஜேவீரவை சிறையில் அடைந்திருந்தார். இந்த நிலையில், 1988 ஆம் ஆண்டு கூட்டணியை ஏற்படுத்த சிறிமாவே விதித்த நிபந்தனைகளை ஜே.வி.பி நிராகரித்தது.

எனினும் ரணசிங்க பிரேமதாசவோ, ரோஹன விஜேவீரவோ, விஜய குமாரதுங்கவோ தமக்கான அச்சுறுத்தல் மேட்டுக்குடி பிரபு வகுப்பினர் மத்தியிலேயே இருக்கின்றது என்பதை உணரவில்லை.

அவர்கள் தமது மேட்டுக்குடியினர் அல்லாத வகுப்பு தலைவர்களே தமது எதிரிகளாக கருதினர். இதனையே மேட்டுக்குடி பிரபு வகுப்பினரும் விரும்பினர்.

ரோஹன விஜேவீர, விஜய குமாரதுங்கவை எதிரியாக கருதினார்.விஜய குமாரதுங்க, விஜேவீரவை எதிரியாக கருதினார். இந்த நிலையில், ஜே.வி.பியினர் விஜய குமாரதுங்கவை கொலை செய்தனர். பிரேமதாச,விஜேவீரவை கொலை செய்தார்.

இறுதியில் ஐக்கிய தேசியக்கட்சியில் உள்ள மேட்டுக்குடி பிரபுக்களும், சிறிமாவோ பண்டாரநாயக்கவும் இணைந்து ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்து, அவரை கொல்லாமல் கொலை செய்தனர்.

வடக்கில் மேட்டுக்குடி அல்லாத கீழ் வகுப்பை சேர்ந்த தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் விடுதலைப் புலிகள் ரணசிங்க பிரேமதாசவை கொலை செய்தனர்.

பிரபாகரனும் வடக்கில் மேட்டுக்குடி அரசியல் வகுப்பினருக்கு எதிராக கிளர்ச்சி செய்த தலைவர். இவர்கள் நான்கு பேரும் உயர்சாதி வகுப்புகளை சேர்ந்தவர்கள் அல்ல.

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் சூழ்ச்சி
வரலாற்றில் ஒரே சம்பவம் தற்போது வேறு விதமாக நடந்து வருகிறது. பிரபுக்கள் அல்லாத இரண்டு தலைவர்களுக்கு இடையிலான போட்டியை மேட்டுக்குடி பிரபு வகுப்பினர் அச்சத்துடன் அவதானித்து வருகின்றனர்.

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டும் என்ற யோசனை என்பது ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் மேட்டுக்குடி பிரபு வகுப்பினரின் சூழ்ச்சி.

பிரேமதாச, விஜேவீரவை போல், சஜித்தும் அனுரகுமாரவும் தமது உண்மையான எதிரிகள் யார் என்பதை இன்னும் அடையாளம் காணவில்லை.

அனுரகுமார திஸாநாயக்கவே தனது எதிரி என சஜித் பிரேமதாச நினைக்கின்றார். சஜத் பிரேமதாசவே தனது எதிரி என அனுரகுமார எண்ணுகிறார். எனினும் இவர்கள் இருவருக்குமான எதிரி மேட்டுக்குடி பிரபுகள் வகுப்பினர் என்பதை இவர்கள் உணரவில்லை.

எனினும் 1988 ஆம் ஆண்டுகளில் ஜே.வி.பியின் வன்செயல்கள் பிரபு வகுப்பினருக்கு பெரும் சவாலாக அமைந்தது போல், கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் போராட்டம் மேட்டுக்குடி பிரபு வகுப்பு அரசியல்வாதிகளின் காலை பிடித்து தரையில் தூக்கி அடித்தது.

1988 ஆம் ஆண்டு பிரபுக்கள் வகுப்பை சாராத ஒருவர் ஜனாதிபதியாக தெரிவானார். இம்முறையும் அப்படியான ஒருவரே ஜனாதிபதியாக தெரிவாக வாய்ப்புள்ளது.